திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (40). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இவர், சரிவர வேலைக்குச் செல்லாமல் அப்பகுதியில் சுற்றிவந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த தஸ்தகீர், அப்பகுதியில் இருந்த தெரு நாயைப் பிடித்து தொந்தரவு செய்துள்ளார்.

அப்போது, அந்த நாய் தஸ்தகீரைக் கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தஸ்தகீர், நாயின் பின்னங்கால்களைக் கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார். நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், தஸ்தகீர் நாயைத் தொடர்ந்து தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியே சென்ற ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதைப் பார்த்த மதுரையைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர், ஆன்லைன் மூலம் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய அவிநாசி போலீஸார், நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற தஸ்தகீரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.