தமிழகத்தில் ஏப்.1 முதல் ‘பூத் சிலிப்’ விநியோகம்: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில், “இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3.06 கோடி பேர் ஆண்கள், 3.16 கோடி பேர் பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.\
இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் 39 உள்ளது. தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்ரல் 7-க்குள் முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.
பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை வரை ரூ.68 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை – வழக்கு முடித்துவைப்பு: மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒதுக்கீட்டு சின்னம் ஒதுக்க முடியும். தற்போது பம்பரம் ஒதுக்கீட்டு சின்னமாக இருக்கிறது. அது பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை. பொது சின்னமாக அறிவிக்காதபட்சத்தில், மனுதாரர் கோருவது போல ஒதுக்கீடு செய்து தர முடியாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மதிமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதனிடையே, இன்று வேட்பு மனுதாக்கல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவான கட்சிகளுக்கு உடனடியாக சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நேர்மையோடு நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் காக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மதிமுகவுக்கு தீப்பெட்டி (அ) கேஸ் சிலிண்டர் சின்னம்!
தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்ட நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “பம்பரம் சின்னம் கிடைக்காத பட்சத்தில், இரண்டு சின்னங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
அவர் கடந்த 25-ம் தேதி தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில், பம்பரம் இல்லாத பட்சத்தில், தங்களுக்கு தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே, இந்த இரண்டு சின்னங்களில் ஒன்றில்தான் மதிமுக இம்முறை போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் விமர்சனம் – அன்புமணி பதிலடி: சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அன்புமணி ராமதாஸ் ஒரு வேடந்தாங்கல் பறவை. அதனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்” என்று விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம். 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்று இருக்காது” என்று கூறியுள்ளார்.
“கூட்டணி வைத்திருந்தால் சின்னம் கிடைத்திருக்கும்” – சீமான்: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்” என்று பாஜகவை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 24 பேர் கைது: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி பகுதியில் கள்ள சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீஸார், 24 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 83 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.18,000-ஐ பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் நேரில் விளக்கம் பெற்றுள்ளது.
“எனது கணவர் உண்மையை வெளியிடுவார்” – சுனிதா கேஜ்ரிவால்: டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் வியாழக்கிழமை தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா தெரிவித்தார். முன்னதாக, அரவிந்த் கேஜ்ரிவாலை சுனிதா செவ்வாய்க்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுனிதா கூறுகையில், “மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.
பாமக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்: பாட்டாளி மக்கள் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து சென்னை கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இதில், 2021-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தி வெற்றி பெறும்; நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும்;
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும்; மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை; இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிபதி ரோகிணி ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்து நடவடிக்கை என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பேசுபொருளான பாமக வாக்குறுதி – அன்புமணி, ராமதாஸ் விளக்கம்: ‘21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்’ என்று பாமக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதி குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி, “ஒரு பெண்ணுக்கு 18 வயது என்பது மிக இளம் வயது. எங்களை பொறுத்தவரை 18 வயது உள்ளவர்களை குழந்தைகளாக பார்க்கிறோம். 18 வயது வந்தவுடன் திருமணம் முடித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு எதிர்காலமே கிடையாது. தருமபுரி போன்ற இடங்களில் இளம் தாய்மார்களை பார்த்துள்ளேன். அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் நிறைய வருகிறது.
சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் பெற்றோர்கள் சம்மததுடன்தான் திருமணம் என்கிற நிலைப்பாடு இருக்கிறது. அதனை தான் நாங்களும் சொல்கிறோம். அப்படி இல்லை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது 21 என்று சட்டம் கொண்டு வாருங்கள். அப்படி சட்டம் வரும்வரை பெற்றோர்கள் ஒப்புதல் தேவை என்று சொல்கிறோம்” என்று அன்புமணி தெரிவித்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “காதலோ, இல்லையோ பெற்றோர்கள் ஒப்புதல் தேவையா இல்லையா. காதலிக்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். ஹார்மோன் சமநிலையின்மை என்று சொல்வார்கள். ஹார்மோன் சமநிலையின்மையின்போது காதல் வயப்படுவது சகஜம். ஆனால் முதிர்ச்சி வரவேண்டும். பெண்கள் படிப்பை முடிக்க வேண்டும். அதேபோல் வேலை கிடைக்க வேண்டும். பெற்றோர்கள் சம்மதம் வேண்டும். அவர்கள் சம்மதம் இல்லையென்றால், வயது, படிப்பு மற்றும் வேலை இருந்தால் பிரச்சினையில்லை” என்று கூறினார்.
“தேர்தல் பத்திர விவகாரத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு”: தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். செய்தி சேனல் ஒன்றுக்கு பரகலா பிரபாகர் அளித்த பேட்டியில்,”இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையால், ஆளும் பாஜக அரசாங்கம் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“போதைப்பொருள் கடத்தவே திமுகவில் அயலக அணி!” – இபிஎஸ்: “போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது. இந்த அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்” என்று நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம்: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?” என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எல்லோருக்கும் இருக்கும் சவால்தான் எனக்கும்!”: “தருமபுரி மக்களவை தொகுதியில் முதல் பெண் வேட்பாளர் பெருமையாக நினைக்கிறேன். இதற்கான வாய்ப்பு வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லோருக்கும் இருக்கும் சவால்தான் எனக்கும் உள்ளது. இதற்கு கடுமையாக உழைக்கவும், உண்மையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். மேலும், வெற்றி வாய்ப்பு உறுதி எனவும் தெரிவிக்கின்றனர்” என தருமபுரி பாமக மக்களவை வேட்பாளர் சவுமியா அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
சத்தீஸ்கர் என்கவுண்டரில் 6 நக்சல்கள் உயிரிழப்பு: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர்.