Thalapathy 69: லாக்கான ஸ்க்ரிப்ட், கதை கேட்பதை நிறுத்திய விஜய்; கடைசி படத்தின் இயக்குநர் இவர்தானா?

விஜய்யின் `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் கட்டத்தில் இருப்பதால், அவரது அடுத்த படமான `தளபதி 69′ படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பை விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், தன் முழுநேர அரசியல் என்ட்ரிக்கு முன்னதாக ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார். அதனால் இப்போது நடித்து வரும் ‘The GOAT’ படத்தை அடுத்து அவரது 69வது படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார். இதனாலேயே அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்னணி இயக்குநர்கள் பலரது பெயர்களும் ஒரு ரவுண்டு வந்தது. அதன் பின் இப்போது அட்லி, திரிவிக்ரம், அ.வினோத் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி வருகிறார்கள். இதற்கு முன் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மாலினேனி உட்படப் பலரும் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கின்றனர். இதில் வெற்றிமாறன் ஏற்கெனவே ‘விடுதலை 2’, ‘வாடிவாசல்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவு.

Vijay

அதைப்போலத் தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படத்தை இயக்கியிருந்தார். அது சுமாராக மட்டுமே ஓடியது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் பல்ஸ் தெரிந்த கோலிவுட் இயக்குநர் இயக்கினால்தான் சரியாக இருக்கும் என்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். அட்லி, அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் என்ற பேச்சு இருக்கிறது. ஆகையால், அல்லு அர்ஜுனின் கால்ஷீட்டைப் பொறுத்து, அட்லி இயங்குவார். ஆனாலும் விஜய்க்கான கதை அட்லியிடம் தயாராகவே இருக்கிறது.

‘துணிவு’ இயக்குநர் அ.வினோத் அடுத்து கமலை இயக்குகிறார் என்றனர். கமலோ ஏற்கெனவே கமிட்டான படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழலில் இருப்பதால், ‘இந்தியன் 3’, ‘தக்லைஃப்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் இருக்கிறார். அதனால் வினோத் இயக்கும் படம் தள்ளிப்போனது. இதற்கிடையே வினோத் அடுத்து தனுஷை இயக்குகிறார் என்றனர். அதன்பின் கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் இரண்டு’ இயக்குவார் என்ற பேச்சும் வந்தது. தனுஷும் கார்த்தியும் இன்னும் ஒரு வருடத்திற்கான லைன் அப்பில் இருப்பதால் வினோத் இப்போது விஜய்யை இயக்க தயாராகவே இருக்கிறார். வினோத் சமூக அக்கறையுள்ள ஸ்க்ரிப்ட்களைத் தொடர்ந்து இயக்கி வருபவர் என்பதால் ‘தளபதி 69’ படத்திற்குச் சரியான தேர்வாக இருக்கும் என்ற பேச்சு இருக்கிறது. விஜய்யின் சாய்ஸிலும் வினோத் இருக்கிறார் என்கிறார்கள்.

Vijay

முன்பு, `The Goat’ படப்பிடிப்புக்கு இடையே கதைகள் கேட்டு வந்த விஜய், அவர் மனதில் இயக்குநர் முடிவாகிவிட்டதால் மேற்கொண்டு கதைகள் கேட்பதை நிறுத்திவிட்டார் என்கிறார்கள். ஆக, `The Goat’ படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில், அடுத்த படத்தின் இயக்குநர் அறிவிக்கப்படலாம் என்கிறது அவரது வட்டாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.