டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். நேற்றைய தினம் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி வெளியுறவுத்துறை, “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே ஆம் ஆத்மி தலைவரும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தது.
அதற்குப் பதிலளித்திருந்த இந்திய வெளியுறவுத்துறை, “ஜெர்மனின் கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு. எங்கள் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது, நீதித்துறையின் சுதந்திரத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துவது போன்ற கருத்துகளையே நாங்கள் காண்கிறோம்” எனக் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், “அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது.

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசு எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற இந்தியாவின் ஆளும் பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் குறித்து, ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஐ.நா நம்புகிறது. இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் அனைத்து நாட்டிலும், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்றும் நாங்கள் மிகவும் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.