`தமிழிசைக்குப் பரிதாபப்பட்டு ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்!' – கனிமொழி பேச்சு

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாகப் பல்வேறு தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். முன்னதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஒருநாள் முழுக்க தமிழச்சியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

கமல்ஹாசன், தமிழச்சி தங்கபாண்டியன்

அதன்படி திருவான்மியூரில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி, “எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றி, தொழிலதிபர்களை மிரட்டி காசு வாங்கமுடியுமோ, அதையெல்லாம் பா.ஜ.க அரசு செய்கிறது. அதானி, அம்பானிக்கு பிரச்னையென்றால், பூடான், வங்க தேசம், ஆஸ்திரேலியா வரை பேசுவார் மோடி. ஆனால், தமிழ்நாட்டுக்கு பிரச்னையென்றால், என்னவென்றுகூட கேட்கமாட்டார். வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய்கூட தரவில்லை.

நம்முடைய முதல்வர் ஸ்டாலிடன்தான் நிவாரணமாக 6,000 ரூபாய் கொடுத்தார். வேறு யாரும் ஒரு ரூபாய்கூட தரவில்லை. கார்ப்பரேட் கம்பேனி முதலாளிகளுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் உணவு பொருளுக்கு அடிப்படை ஆதாரவிலை தருவதற்குக்கூட மோடி அரசுக்கு மனமில்லை.” என்று பா.ஜ.க அரசை கடுமையாகச் சாடினார். பிரசாரத்தின் நடுவே தி.மு.க தொண்டர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி கனிமொழியிடம் கொடுத்தார். குழந்தையைப் பெற்றுக் கொண்டு ‘தமிழிச்சி’ என்று தென்சென்னை வேட்பாளரின் பெயரையே வைத்தார். அதை கனிமொழி அறிவிக்கும்போது உற்சாக கோஷமிட்டனர் கட்சி தொண்டர்கள்.

பிரசாரத்தின்போது கனிமொழி

தொடர்ந்து தைசாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர், ‘ நான் கவர்னர் பதவியெல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். உண்மையில் அவர் விட்டுவிட்டு வரவில்லை. வேறு வேட்பாளர் அந்தக் கட்சியில் இல்லை. யாரும் இங்கு (தென்சென்னையில்) நிற்க முன்வரவில்லை. அதனால்தான், கவர்னராக இருந்தவரை ராஜினாமா செய்யவைத்து, தென்சென்னையில் நிறுத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதற்காக பரிதாபப்பட்டு ஓட்டு போட்டுவிடாதீர்கள். ஏனென்றால், பா.ஜ.க-வால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும், பலனும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

தொடர்ந்து, விருகம்பாக்கம், மயிலாப்பூர் பகுதியில் தமிழச்சியை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.