புதுடெல்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளில் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்த சூழ்நிலையை உணர்வுபூர்வமாக கையாள்வது நமது கூட்டுப் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். இதுகுறித்து நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நாங்கள் எங்களின் சிறந்த வளங்களையும் நிர்வாக இயந்திரங்களையும் அர்ப்பணித்துள்ளோம்.
சரியான நேரத்தில் மத்திய அரசின் தலையீடு மற்றும் மணிப்பூர் அரசின் தீவிர முயற்சிகள் காரணமாக, மாநிலத்தின் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோதல் உச்சத்தில் இருந்த நேரத்தில் மணிப்பூரில் தங்கி, மோதலைத் தீர்க்க உதவுவதற்காக 15-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினார்.
மாநில அரசுக்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 65,000பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சுமார் 6,000-க்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.