பாரத தேசமெங்கும் ஆதிசங்கரர் பயணம் செய்து தேசத்தின் நான்கு திசைகளிலும் திருமடங்களை நிறுவி ஆன்மிகப் பணி சிறக்க வகை செய்தார். அந்த வகையில் தேசத்தின் தெற்கு திசையில் அவரால் நிர்மாணிக்கப்பட்ட மடம் சிருங்கேரி சாரதா பீடம். இந்த பீடத்தைப் பல்வேறு மகான்கள் பீடாதிபதிகளாக இருந்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள். 1954 முதல் 1989 வரை சிருங்கேடி மடத்தின் பீடாதிபதியாக இருந்து சேவை செய்தவர் ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள். இவரின் ஆசியோடு தொடங்கப்பட்டது, சென்னை ஶ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன். பல்வேறு நலத் திட்டங்களையும் ஆன்மிக நிகழ்வுகளையும் அடிக்கடி நிகழ்த்திவரும் இந்த நிறுவனம் இந்த ஆண்டு, ‘சங்கர விஜயம்’ என்னும் அற்புதமான நிகழ்வைச் சென்னையில் ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.

தற்போது ஶ்ரீமடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஶ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் சந்நியாசம் ஏற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தத் தருணத்தில் அதைப் போற்றும் வகையிலும் உலகமெங்கும் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படவும் ‘சங்கர விஜயம்’ என்கிற நிகழ்வை ஶ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளின் பரிபூரண ஆசியோடு ஶ்ரீவித்யாதீர்த்த பவுண்டேஷன் ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
இந்த நிகழ்வு, சென்னை அடையாறு ஶ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோயில் கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் (7.4.21) தொடங்கியது. தொடர்ந்து ஏழு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டு ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சொற்பொழிவுகளை நிகழ்த்த இருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சியை நாகலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் தொடங்கிவைத்து உரையாற்றினார். அவர் தன் உரையில் ஶ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் இந்த தேசத்தின் ஆன்மிக வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணி குறித்து விளக்கினார்.
தொடர்ந்து அன்று மாலை பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்புக் கருத்தரங்கமும் நடைபெற்றது. தொடர்ந்து 13-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு அற்புதமான சொற்பொழிவுகள் நடைபெற இருக்கின்றன. இதில் இலங்கை ஜெயராஜ், சுவாமி சிவயோகானந்தா, ஶ்ரீ சுவாமி சிவகுருநாத தம்பிரான், நெரூர் ஶ்ரீ வித்யாசங்கர சுவாமிகள், ஶ்ரீமதி விசாகா ஹரி குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு ஆன்மிக விருந்து அளிக்க இருக்கிறார்கள்.
விழாவின் இறுதிநாளான ஏப்ரல் 13 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வில், ஆன்மிக சேவை ஆற்றிவரும் 50 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஶ்ரீவித்யாதீர்த்த பவுண்டேஷன் சார்பில் ‘வித்யா பாரதி புரஸ்கார்’ என்னும் விருது வழங்கப்பட இருக்கிறது. விருதினை பவுண்டேஷன் சார்பில் தமிழக ஆளுநர் வழங்க இருக்கிறார்.

இந்தப் பெருமைமிகு விருதை, ஆன்மிகப்பணி ஆற்றிவரும் ஊடகம் என்னும் பிரிவில் சக்தி விகடன் இந்த ஆண்டு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிநாள் விழாவின் மாலையில் 6.45 மணிக்கு, ஶ்ரீமதி தேசமங்கையர்கரசியின் சொற்பொழிவும் நடைபெற இருக்கிறது.
மாபெரும் அறிஞர்களின் உரையைத் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. எனவே பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகப் பெறலாம். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஶ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன் சார்பில் கேட்டுக்கொள்கிறார்கள்.