திருவனந்தபுரம்: “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கும் மவுனத்துக்குக் காரணம், அதற்கு இருக்கும் பாஜக மனநிலைதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அட்டிங்கல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பினராயி விஜயன், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து காங்கிரஸும், ராகுல் காந்தியும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சிஏஏ பற்றி எதுவும் கூறவில்லை.
அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிஏஏவை எதிர்க்கின்றன, விமர்சித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியால், அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவோ அல்லது பாஜகவின் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கவோ முடியவில்லை. இதற்குக் காரணம், காங்கிரஸிடம் இருக்கும் பாஜக மனநிலைதான்.
அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக செயல்படும்போது மட்டுமே அவற்றை காங்கிரஸ் எதிர்க்கிறது. மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றால், அது அமைதியாக இருக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஎம் தலைவர் தாமஸ் ஐசக் ஆகியோரின் உதாரணங்களே இதற்கு போதுமானவை.
மதுபானக் கொள்கை தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிதான் காவல் துறையில் புகார் அளித்தது. அமலாக்கத் துறை அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்த புகார்தான் அடிப்படை. இதேபோல், KIIFB மசாலா பத்திர வழக்கு விசாரணை தொடர்பாக தாமஸ் ஐசக்கை ஏன் அமலாக்கத் துறை கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களித்து பலரை நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பிவைத்தனர். ஆனால், மதச்சார்பற்ற தேசியப் பிரச்னைகள் எவை குறித்தும் அந்த எம்பிக்கள் மக்களவையில் குரல் எழுப்பவில்லை. இதனால், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல், மத்திய அரசு கேரளாவை புறக்கணிக்கும் விஷயத்திலும், மாநிலத்தை பொருளாதார ரீதியாக திணறடிக்கும் நிதிக் கட்டுப்பாடுகள் விஷயத்திலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் அமைதியாகவே இருந்தார்கள்” என குற்றம் சாட்டினார்.
இதனிடையே, பினராயி விஜயனின் குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், “சிஏஏ-வுக்கு எதிராக மக்களவையில் நானே பல முறை பேசி இருக்கிறேன். வேண்டுமென்றால், அவற்றை முதல்வருக்குக் காட்ட நான் தயார்” என குறிப்பிட்டார்.
இதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ராகுல் காந்தியைப் போல பாஜகவை எதிர்ப்பவர்கள் வேறு யாரும் கிடையாது. நரேந்திர மோடியை திருப்திப்படுத்தவே ராகுல் காந்தி மீது விஜயன் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான இண்டியா அணி ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்.
மாநிலத்தின் நிதி விவகாரத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசின் கொள்கைகள் கட்டுப்பாடானவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதேநேரத்தில், கேரளாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு அவை மட்டுமே காரணம் அல்ல. இடதுசாரி அரசாங்கத்தின் தவறான நிர்வாகம், ஊதாரித்தனம், ஊழல், மோசமான வரி வசூல் ஆகியவையே மாநிலத்தின் நிதிப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம்” என்று தெரிவித்தார்.