மலையாளத் திரையுலகத்தில் புதிய பிரச்சனை : மற்ற மொழிகளுக்கும் பரவுமா ?

2024ம் வருடத்தில் இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மற்ற எந்த மொழி படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், வசூலையும் பெற்று வருகின்றன. தற்போது அத்திரையுலகம் புதிய பிரச்சனை ஒன்றை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

இந்திய அளவில் அதிகமான தியேட்டர்களைக் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான பிவிஆர், ஐனாக்ஸ், அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களை திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியுள்ளது. இதனால், மலையாளத் திரையுலகினல் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

விபிஎப் எனப்படும் விர்சுவல் பிரிண்ட் கட்டணம் தான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம். சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின் சினிமா திரையிடல் டிஜிட்டல் மூலமாக நடைபெற்று வருகிறது. அதற்குரிய வசதிகளை, க்யூப், யுஎப்ஓ போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதற்காக படத் தயாரிப்பாளர்கள் அந்த நிறுவனங்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் விபிஎப் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அப்படி விபிஎப் கட்டணமாக ஒரு வாரத்திற்கு 11500 ரூபாயாகவும், நான்கு அல்லது ஐந்து தியேட்டர்களுக்கு மேல் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாக இருந்தால் 24500 ரூபாயாகவும், ஒரு காட்சி என்று இருந்தால் அதற்கு 450 ரூபாயாகவும் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்தி வருகிறார்கள்.

அந்தக் கட்டணங்களைக் குறைப்பதற்காக மலையாள தயாரிப்பாளர் சங்கம் கடந்த இரண்டு வருடங்களாக முயற்சித்து 'பிடிசி' என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். பிடிசி மூலம் பிரிண்ட் காப்பிகளைப் பெற்றால் ஒரு வாரத்திற்கு 3500 ரூபாயாகவும், வாழ்நாள் கட்டணமாக 5500 ரூபாயாகவும், அதுவே மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாக இருந்தால் 7500 ரூபாயாகவும் நிர்ணயித்தார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை சேமிப்பாகக் கிடைக்கும்.

ஆனால், பிவிஆர் ஐனாக்ஸ் போன்ற நிறுவனங்கள் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தில் உள்ளதால் அவர்கள் தயாரிப்பாளர்களின் நிறுவனமான பிடிசி-யிடமிருந்து பிரிண்ட்களை வாங்குவதில்லை. இதுதான் தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணம்.

சமீபத்தில் கொச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பிவிஆர், ஐனாக்ஸ் நிறுவனத்தில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 'பிடிசி'யிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு பிவிஆர்நிறுவனம் சம்மதிக்கவில்லை. அது சட்டப்படி தவறு என்று எதிர்க்கிறது.

ஆனால், ஏற்கெனவே உள்ள தியேட்டர்களில் முன்பு யாருடன் இணைந்து படங்களைத் திரையிட்டார்களோ அவர்களுடனேயே படத்தைத் திரையிடட்டும். ஆனால், புதிய தியேட்டர்களில் எங்களது பிடிசி சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மலையாள தயாரிப்பாளர் சங்கம் சொல்கிறது. ஆனால், பிவிஆர்நிறுவனம் எதையும் ஏற்காமல் உடனடியாக மலையாளப் படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது, இது தவறான முடிவு. அனைத்து தியேட்டர்களும் 'மஞ்சும்மேல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு' போன்ற படங்கள் மூலம்தான் சமீபகாலத்தில் நடத்த முடிந்தது. இது சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமே மலையாளப் படங்களைத் திரையிடுவதை பிவிஆர், ஐனாக்ஸ் நிறுத்தியுள்ளது. நேற்று வெளியான மலையாளப் படங்கள், இதற்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மலையாளப் படங்களின் வசூல் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகத்தின் இந்த பாதிப்பு குறித்து மற்ற மொழி திரையுலகினரும் விரைவில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.