முதல்வர் ஸ்டாலினுக்காக கடைக்குச் சென்று இனிப்பு வாங்கிய ராகுல் காந்தி @ கோவை

கோவை: கோவையில் இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக கடைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சிங்காநல்லூர் பகுதியில், சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழைகிறார் ராகுல் காந்தி. அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர்.

அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்கிறார். “யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார்?” என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்கவே, அவரிடம் “என் சகோதரர் ஸ்டாலினுக்காக” என்று பதிலளிக்கிறார் ராகுல்.

கடையின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்ட ராகுல் காந்தி, கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன் – என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.