விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அருப்புக்கோட்டை செம்பட்டியில் உள்ள என்.ஜி.ஓ காலனி பகுதி மக்களிடம் வாக்குகேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது கூடியிருந்த கூட்டத்தினர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை பார்த்து, `கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நல்லதும் செய்யவில்லை, வேட்பாளரும் வரவில்லை,


ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை நிறைய பேருக்கு கிடைக்கவில்லை, ஓட்டு கேட்க வேட்பாளர் வராமல் நீங்கள் மட்டும் வருவது சரிதானா?, நீங்கள் ஆதரவுகேட்டு வந்தாலும், வாக்கு அவருக்கு தானே செலுத்தவேண்டும்’ என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி பேசினர். இதனால் டென்ஷனான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொதுமக்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ விருதுநகர் மாவட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.