மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. இத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜ.க மற்றும் சிவசேனா (ஷிண்டே) இடையே தொகுதிப் பங்கீடு தொடர்ந்து இழுத்துக்கொண்டே செல்கிறது. நாசிக் உட்பட சில தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நாசிக் தொகுதியில் தற்போது சிவசேனா(ஷிண்டே) சார்பாக கோட்சே என்பவர் எம்.பி.யாக இருக்கிறார். ஆனால் இம்முறை அத்தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகன் புஜ்பாலை நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடித்தது.
ஆனால் தற்போது எம்.பி.யாக இருக்கும் கோட்சேவிற்கு மீண்டும் அத்தொகுதி வழங்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டேயும் அடம்பிடித்து வந்தார். கோட்சேயும் மும்பையில் முகாமிட்டு முதல்வர் ஷிண்டேயிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். இதே போன்று தென்மும்பை, ரத்னகிரி போன்ற சில தொகுதியிலும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் பிரசாரம் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வந்தது. இதையடுத்து ரத்னகிரி தொகுதியை தனக்கு வைத்துக்கொண்டு தென்மும்பை தொகுதியை சிவசேனாவிற்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

மும்பையில் பா.ஜ.க மற்றும் சிவசேனா (ஷிண்டே) தலா மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதே போன்று நாசிக் தொகுதியையும் சிவசேனாவிற்கே விட்டுவிடுவது என்று பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தன்னிடம் இருக்கும் 13 எம்.பி-க்களுக்கும் சீட் வேண்டும் என்பதில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். எனவே விட்டுக்கொடுத்துப்போக பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தானே தொகுதியை பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது. அதிலும் சுமூக தீர்வு எட்டப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடு முறைப்படி அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்ததால், சரத் பவார் மீது சிறிய அளவில் அனுதாபம் இருக்கிறது. மாதா, பாராமதி, ஷிரூர், அகமத் நகரில் அதன் தாக்கம் இருக்கும் என்று பா.ஜ.க கருதுகிறது. ஆனாலும் மோடி அலை மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டி வெற்றி பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க நம்பிக்கை தெரிவித்துள்ளது.