புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை வடகிழக்கு டெல்லி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கடந்த 2017-ல் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் வென்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னையா குமார். புரட்சிப் பேச்சாளரான இந்த இளைஞர் பிஹாரைசேர்ந்தவர். தனது முனைவர் பட்டத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான பேகுசராயில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்விக்கு கன்னையா குமார் போட்டியாளராகி விடுவார் என அஞ்சினார். இதனால் இடதுசாரிகள் தங்கள் கூட்டணியில் இருந்தபோதும் பேகுசராயில் ஆர்ஜேடி சார்பில் தனது வேட்பாளரையும் நிறுத்தினார். இதில் வாக்குகள் பிரிந்து, பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் கன்னையா தோல்வி அடைந்தார்.
2024-ல் இவருக்கு பேகுசராயில் மீண்டும் வாய்ப்பளிக்க காங்கிரஸ் விரும்பியதாகத் தெரிகிறது. இதற்கு மீண்டும் லாலு மறுக்கவே, கன்னையாவுக்கு டெல்லியில் போட்டிடும் வாய்ப்பு உருவாகி விட்டது.
டெல்லியின் 7 தொகுதிகளில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதில் ஒன்றான வடகிழக்கு டெல்லியில் பிஹாரின் போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ்திவாரி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் வென்ற மனோஜுக்கு மூன்றாவது முறையும் வெற்றிக்கான சூழல் உள்ளது.
எனவே அவருடன் மோத அதே மாநிலத்தின் கன்னையாவை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு படிப்பு காலத்தில் கன்னையா மீதான தேசவிரோத வழக்கை பாஜக மீண்டும் கையிலெடுத்து பிரச்சாரம் செய்யவும் தயாராகி வருகிறது. வடகிழக்கு டெல்லியில் பிஹார்வாசிகள் கணிசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.