தமிழகத்தின் வளர்ச்சியை மறைத்து பேசுவதா? – பிரதமர், அமைச்சர்கள், அதிமுகவுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் துறையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசே தெரிவித்துள்ள நிலையில், பிரதமரும், அமைச்சர்களும், அதிமுகவினரும், தமிழகத்தின் வளர்ச்சி பற்றி குறை கூறி வருவது உண்மைக்கு மாறானதாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தேர்தலுக்குப்பின் திமுக காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் என்ற பெரிய பதவியில் உள்ளவர், திமுகவின் வரலாறு தெரியாமல் சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பேசினார். அவர் தலைமையில் இதுவரைஇயங்கி வரும் மத்திய அரசின்ஆய்வு அமைப்புகள் தமிழகத்தின் உண்மை நிலையை விளக்கிஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன. சில தினங்களுக்கு முன் 7 துறைகளில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை அந்த அமைப்புகள் வெளியிட்டன.

தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழகம் இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தமது ஆய்வு அறிக்கைகள் மூலம், அறிந்தும் அறியாமல், இழித்தும் பழித்தும் திமுகவைப் பற்றி பேசும் பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு மீண்டும் புரிய வைத்துள்ளது.

ஜவுளி ஏற்றுமதி: ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து மத்திய அரசின் நிர்யாத் 2022-23-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழகத்தின் பங்கு 22.58 சதவீதம் என அறிவித்து, ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, இந்தியாவின் மொத்தஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழகத்தின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் டாலர். அடுத்து 2-ம் இடத்தில் குஜராத் (4.378 பில்லியன் டாலர்). 3-ம் இடத்தில் மகாராஷ்டிரா (3.784 பில்லியன் டாலர்) ஆகும்.

கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலிருந்து ஆயத்தஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழகம்மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர்ஆகும். இதில் 5.30 பில்லியன் டாலர்மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்த தமிழகம் நாட்டின்முதல் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் கர்நாடகா, 3-ம் இடத்தில் உத்தர பிரதேசம் உள்ளன.

கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதிமதிப்பு குறித்து மத்திய அரசின்நிர்யாத் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதில், 43.20 சதவீத தோல் பொருட்களை அதாவது 2.048 பில்லியன் டாலர் மதிப்புள்ள தோல் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழகம், நாட்டில் முதல் மாநிலம் என்ற பெருமையை பறைசாற்றியுள்ளது.

இப்படி மத்திய அரசின் ஆய்வுஅறிக்கைகளே தமிழகம் பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பாஜகஆளும் மாநிலங்கள் பல்வேறுதுறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமின்றி, எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றியுள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்திலும் கூட தமிழகம் வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது. பிரதமரும், அமைச்சர்களும் பாஜகவுடன் கள்ளஉறவு வைத்துள்ள அதிமுகவினரும், தமிழகத்தின் வளர்ச்சிகளைப் பற்றி குறை கூறிவருவது உண்மைக்கு மாறானதாகும். அது மட்டுமின்றி, உண்மைகளை மறைத்து பொய்களை கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்களே பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.