“தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது” – முத்தரசன் @ ஸ்ரீவில்லி.

ஶ்ரீவில்லிபுத்தூர்: “தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது. 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது பகல் கனவாகவே முடியும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி” என ஶ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சார பேரணியை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஶ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜக தேர்தல் அறிக்கையில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றி இருக்கிறோம் என்ற தகவல் இடம் பெறவில்லை.

தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், கரோனா கால சிகிச்சையில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. ஊழல் குறித்து பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தார்மிக உரிமை கிடையாது. புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவில் சேரும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுவிடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, ரூ.250 கோடி பணத்தை வருமான வரித் துறை தானாக எடுத்துக் கொண்டு ரூ.1,800 கோடி அபராதம் விதித்து உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் காலம் வரை 188 பொது துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பொது துறை நிறுவனங்கள் கூட உருவாக்கப்பட வில்லை. மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரயில்வே, எல்.ஐ.சி, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட உள்ளது.

தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமர் தப்ப முடியாது. மக்களின் கவனத்தை திசை திருப்ப கச்சத்தீவு பிரச்சினையை எழுப்புகின்றனர். நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்க வேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதி. 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது பகல் கனவாகவே முடியும். பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் ஏற்புடையதாக இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.