ஓசூர்: ஓசூரில் பெய்த கனமழையால், தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ஆண்டுமுழுவதும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வந்த நிலையில், நிகழாண்டு கோடைக்கு முன்னேரே கடும் வெயில் வாட்டி வந்தது. வெயிலின் உஷ்ணத்தால் ஓசூர் பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இன்று மாலை 4 மணிக்கு மேல், திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 40 நிமிடம் நீடித்த மழையால், ஓசூரில் மட்டும் 40.3 மிமீ. மழை பதிவானது.
கனமழை காரணமாக ஓசூரில் சாலையோரம், வட்டாட்சியர் அலுவலகம், ரயில்வே சுரங்கப்பாதை உள்பட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ரயில்வே சுரங்கப்பாதையில் 3 அடிக்கு மேல் தேங்கி நின்ற மழைநீரில் அவ்வழியாக வந்த ஆட்டோ சிக்கிக் கொண்டது. பின்னர் பொதுமக்கள் உதவி உடன் ஆட்டோ மீட்க்கப்பட்டது.

இதேபோல், கனமழையால், தமிழக – கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடி முதல் அத்திப்பள்ளி வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இரு மாநில எல்லையில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.