புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த்கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மக்களவைத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்வதற்காக 21 நாள்கள் இடைக்காலஜாமீனில் வெளியே வந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில்கடந்த 2-ம் தேதி மீண்டும் அவர் திஹார் சிறையில் சரணடைந்தார்.
இதனிடையே, உடல்நலக்குறைவு, மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்ற காவலில்உள்ளதால் திஹார் சிறை அதிகாரிகள், அர்விந்த் கேஜ்ரிவாலின் மருத்துவ தேவையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிஅறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அவரது ஜாமீன்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், அவருக்குஏற்கெனவே ஜூன் 5-ம் தேதி வரைவழங்கப்பட்டிருந்த நீதிமன்ற காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், கேஜ்ரிவால் ஜாமீன் கோரிய மற்றொரு மனுவின் மீதான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.