இனி சிஎஸ்கே அணிக்கு இவர் கேப்டனும், கீப்பரும்… ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு கன்பார்ம்?!

Ruturaj Gaikwad Wicketkeeping Viral Video: 2024 ஐபிஎல் சீசன் கடந்த மாதம்தான் நிறைவடைந்தது. 10 அணிகள் முட்டிமோதிய அந்த தொடரில் மூன்றாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. ஹைதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைய ராஜஸ்தான் குவாலிஃபயர் 2 போட்டியிலும், ஆர்சிபி எலிமினேட்டரிலும் தோல்வியடைந்து வெளியேறின. மும்பை, சென்னை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கே தகுதிபெறவில்லை. 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி (MS Dhoni) குறித்துதான் ஐபிஎல் தொடர் முழுவதும் பேச்சுகள் இருந்தன. 2024 தொடர் அவருக்கு நிச்சயம் கடைசி சீசனாக இருக்கும் என பலரும் கூறிவந்தனர். குறிப்பாக, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அவர் இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்சிபியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்து வெளியேறியது தோனியின் ஓய்வு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இதனால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை எனலாம். 

சிஸ்கே தக்கவைக்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன் மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) நடைபெற இருக்கிறது. ஆனால் இதுவரை எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது குறித்த முடிவு இன்னும் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படவில்லை. எனவே, ஐபிஎல் நிர்வாகம் அதனை அறிவித்த பின்னரே பல அணிகள் யார் யாரை தக்கவைப்பது, யார் யாரை விடுவிப்பது என்ற முடிவுக்கு வரும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம், எனவே மெகா ஏலம் நெருங்க நெருங்க இதுகுறித்த பரபரப்புகள் தொற்றிக்கொள்ளும் எனலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அதன் கேப்டன்ஸியை சென்ற சீசனிலேயே மாற்றிவிட்டது. இது அணி நிர்வாகத்தின் முடிவில்லை என்றாலும் எதிர்கால நலன் கருதி தோனியே இந்த முடிவை எடுத்தார் என பலராலும் கூறப்படுகிறது. எனவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்கவைத்து, யார் யாரை விடுவிக்கப்போகிறது என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். தோனியை சேர்க்காமல் ருதுராஜ் கெய்க்வாட், தூபே, ஜடேஜா, பதிரானா ஆகியோரை சிஎஸ்கே தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. 

விக்கெட் கீப்பிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

ஒருவேளை தோனியை தக்கவைத்தாலும் தோனிக்கான பேக்அப்பையும் சிஎஸ்கே இந்த மெகா ஏலத்திலேயே தேட வேண்டும். விக்கெட் கீப்பிங் பேட்டரை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் பலரும் யாரை பேக்அப்பாக சிஎஸ்கே எடுக்கும் என இப்போது இருந்தே ஆர்வமுடன் காத்திருக்கும் சூழலில், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டே சமீபத்திய போட்டி ஒன்றில் விக்கெட் கீப்பராக மாறியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 

டிஎன்பிஎல் போன்ற உள்நாட்டு தொடரான மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் புனேரி பாப்பா (Puneri Bappa) அணிக்கு கேப்டனாக செயல்பட்டாலும் சிஎஸ்கே அணிக்கு களமிறங்குவது போல் இன்றி ஓப்பனிங்கில் இறங்காமல் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். குறிப்பாக சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கையும் மேற்கொண்டது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

Ruturaj Gaikwad #MaharashtraPremierLeague#JioCinemaSports#MPLonJioCinema #MPLonSports18 pic.twitter.com/4pL4X1k7j5

— Sports18 (@Sports18) June 17, 2024

அதுவும் அந்த இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பந்துவீச்சாளர் வைடு வீச, அதனை ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) பாய்ந்து பிடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால், ருதுராஜ் கெய்க்வாட் தோனியை போல் கேப்டன்ஸியோடு, விக்கெட் கீப்பிங்கையும் இனி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு பதில் அடுத்த வருடம் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என பல ரசிகர்கள் இப்போதே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.