சென்னை: சென்னை, புறநகரில் பலத்த மழையால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. துபாய் செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணி அளவில், திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்துக்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன.
துபாயில் இருந்து 262 பயணிகளுடன் வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தோகாவில் இருந்து 314 பயணிகளுடன் வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புனேயில் இருந்து 140 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பார்டிலிருந்து வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துப் பறந்தன.
இதில், துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் மழை நின்று வானிலை சீரானது. இதையடுத்து, வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பார்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்ட துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்து தரையிறங்கியது. இதனால், சென்னையில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு துபாய் புறப்பட வேண்டிய அந்த விமானம் 5 மணி நேரம் தாமதமாக காலை 10 மணி அளவில் துபாய் புறப்பட்டது.