சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி, உளவுத் துறை ஐஜி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இவ்வாறு நிகழ்ந்ததற்கான அனைத்து காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை 3 மாதங்களுக்குள் வழங்கும்” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.