வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாவது பாடலாக `சின்ன சின்ன கண்கள்’ சற்றுமுன் வெளியாகியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர்களாக விஜய், பவதாரிணி பெயர்கள் நேற்று வெளியான ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டிருந்தன. அப்போது பவதாரிணி அவரது மறைவுக்கு முன்பே இந்தப் பாடலைப் பாடிவிட்டாரா அல்லது AI மூலம் அவரது குரல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இன்று வெளியான லிரிக் வீடியோவில் இந்த கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது.

AI மூலம் அவரது குரல் மறு உருவாக்கம் செய்ய உதவிய ‘TimelessVoices.ai’ என்ற நிறுவனத்தின் பெயர் லிரிக் வீடியோவின் முடிவில் இடம்பெற்றிருக்கிறது. AI தொழில்நுட்ப ஆலோசகர் என கிருஷ்ணா சேட்டன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதே நிறுவனத்தின் உதவியுடன்தான் ‘லால் சலாம்’ படத்தில் இடம்பெற்ற ‘திமிறி எழுடா’ பாடலில் ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரலை மறு உருவாக்கம் செய்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்தான் கிருஷ்ணா சேட்டன். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மிக்ஸிங் இன்ஜினியராக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தும் அளவுக்குத் துல்லியத்துடன் குரல்களை மறு உருவாக்கம் செய்யும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது இந்த நிறுவனம். ஏற்கெனவே இருக்கும் அவர்களின் பல்வேறு உயர்தர குரல் பதிவுகளைக் கொண்டு இதைச் செய்கிறது இந்த நிறுவனம். மறைந்த கலைஞர்களின் உரிமைகளை மீறாமல் அவர்களது குடும்பத்தினரின் அனுமதியுடன் அவர்களுக்கான சன்மானத்தைக் கொடுத்து இதைச் செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கம் என்கிறது அவர்களது இணையதளம்.
‘திமிறி எழுடா’ பாடலில் எப்படி பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத்தின் குரல்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டன என்பதை எடுத்துரைக்கும் வீடியோ ஒன்றையும் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பதிவுசெய்திருக்கிறார்கள். அதில் தற்போது ஒருவரைப் பாட வைத்து அந்தக் குரலைத்தான் மறைந்தவரின் குரலை வைத்து மாற்றுகிறார்கள். அதே முறையில்தான் பவதாரிணி குரலும் இந்தப் பாடலுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து யுவன் உருக்கமான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

“பெங்களூரில் இந்தப் பாடலை இசையமைத்தபோது வெங்கட் பிரபுவுக்கும் எனக்கும் இந்தப் பாடலை பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியதும் ரெக்கார்ட் செய்யலாம் என நினைத்திருந்தோம். ஆனால், ஒரு மணி நேரத்திலேயே அவர் மறைந்துவிட்ட செய்தி எங்களுக்கு வந்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என நான் நினைக்கவே இல்லை. இதைச் சாத்தியப்படுத்த உதவியாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நன்றி!” என்று அதில் நெகிழ்ந்திருக்கிறார் யுவன்.
மறைந்த பாடகர்களின் குரலை மறு உருவாக்கம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன? – கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்!