“கள்ளச் சாராய இறப்புக்கு இழப்பீடு வழங்கியது சரியே” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து

நாமக்கல்: “தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரிதான்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு வந்த மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகனுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் தமிழகம் மேம்பாடு அடைந்துள்ளது. இந்த மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தொடர்வதற்கு தமிழகத்தின் பிரதிநிதியாக எனக்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளார் மோடி. தேர்தலில் வேண்டுமானால் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து என்னை ராஜ்யசபா உறுப்பினராக்கி இந்த பொறுப்பை வழங்கி உள்ளார்.

இதற்கு தமிழக மக்களின் சார்பாகவும் நாமக்கல் மக்களின் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மாநில அரசுகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்றார்.

தொடர்ந்து நாமக்கல் வந்த எல்.முருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய பேரிடர். தமிழக முதல்வர் இதற்கு முழு பொறுப்பேற்கே வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த சம்பவம் தமிழக அரசின் தோல்வியை காட்டுகிறது.

காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்த கள்ளச் சாரய சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்துகூட அரசு பாடம் கற்கவில்லை. இது திமுக அரசின் பயங்கரவாதமாகும். தற்போது வரை 55 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இழப்பீடு கொடுத்துவிட்டோம் என்று கூறுவதை ஏற்க முடியாது. போதை வஸ்துகள் பள்ளிகள் அருகிலேயே விற்பனை செய்கின்றனர். கள்ளச் சாராயத்துக்கு மூல காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இதற்காகத்தான் தமிழக பாஜக தலைவர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதனால் இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரி தான். தமிழகத்தில் குறைந்தது 1,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

நாமக்கல் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான அச்சு ஊடகங்கள், டிவி-க்கள், டிஜிட்டில் மீடியாக்கள் மற்றும் சோஷியல் மீடியாக்கள் இயங்கி வருகின்றன. ஊடகத்துறையில் உள்ளவர்கள் தீர விசாரித்து உண்மை செய்திகளை மட்டுமே வெளியிடவேண்டும்.

அரைகுறையான, தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. இதுபோன்ற செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொய்ச் செய்திகளை தவறாக சித்தரித்து வெளியிடும் ஊடகங்களின் மீது, புகார் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.