புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆச்சர்யா லஷ்மிகாந்த் தீட்சித் (82) காலமானார். அயோத்தி கோயிலில் புதிய ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாரணாசியின் நூறு வருட பழமையான வல்லப்ராம் சாலிகிராம் சாங்கவேத வித்யாலயா எனும் வேத பாடசலையில் வேதங்கள் கற்றுத் தரும் பணி செய்தவர், டாக்டர்.லஷ்மிகாந்த் தீட்சித். இவர், தென்னிந்தியா தவிர நாடு முழுவதிலும் பல முக்கிய பெரிய யாகங்கள், கோயில் பிரதிஷ்டைகள், லட்சதந்தி உள்ளிட்ட பல முக்கியப் புனிதப் பணிகளை நடத்தி வைத்தவர். கடந்த ஜனவரியில் நடந்த அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூசையும் லஷ்மிகாந்த் தீட்சித் தலைமையிலேயே நடைபெற்றது. அயோத்தி கோயிலின் ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்ட சமாரோஹம் செய்வதிலும் லஷ்மிகாந்த் தீட்சித்தின் பங்கு முக்கியமாக இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, ஆச்சார்யா லஷ்மிகாந்தின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். உ.பி.,யின் வாரணாசியில் வாழ்ந்து வந்த லஷ்மிகாந்த் தீட்சித், நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் வாரணாசியின் மங்கள கவுரி கோயிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தகவல் கேள்விப்பட்டு வாரணாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பண்டிதர்கள், தீட்சிதர்கள் மற்றும் துறவிகள் அஞ்சலி செலுத்தக் குவிந்தனர்.
நேற்று மதியம் 1.00 மணிக்கு அந்நகரின் மணிகன்காட் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிறகு, ஆச்சார்யா லஷ்மிகாந்தின் உடலுக்கு அவரது மூத்த மகன் ஜெய்கிருஷ்ணா தீட்சித் தீமூட்டினார். முன்னதாக, ஆச்சார்யா லஷ்மிகாந்தின் இறுதிப் பயணம் இன்று காலை 11.00 மணிக்கு துவங்கியது.
இந்த ஊர்வலத்தில், வேதப்பாட சாலையின் முன்னாள், இந்நாள் மாணவர்கள், அப்பகுதியின் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராந்திய ஆணையரான கவுசல் ராஜ் சர்மா, மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இருந்தனர்.
மகராஷ்டிராவை சேர்ந்த லஷ்மிகாந்த் 1942-ல் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பண்டிதர் மதுரநாத் தீட்சித், தாய் ருக்மணிபாய் தீட்சித். தனது சிறிய வயதிலேயே வேதங்கள் கற்கவேண்டி, வாரணாசிக்கு வந்த ஆச்சார்யா லஷ்மிகாத் இங்கேயே தங்கியதுடன், மறைந்தும் விட்டார்.