புதுடெல்லி: நீட் வினாத் தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட ரவி அத்ரியை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவர்கள் சிலரையும் அவர்களின் கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம்கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தரவி அத்ரி என்ற இளைஞருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவின் நீம்கா கிராமத்தில் ரவி அத்ரியை உ.பி. போலீஸார் நேற்று கைது செய்தனர்.
2024-ம் ஆண்டு நீட் வினாத் தாள் கசிவுக்கு ரவி அத்ரி மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் முந்தைய வினாத் தாள் கசிவு சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. ‘சால்வர் கேங்’ என்ற நெட்வொர்க் மூலம் வினாத் தாள் மற்றும் அதற்கான விடைகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது இவரது செயல்பாடாக இருந்துள்ளது. இதற்கு முன் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவில் ரவி அத்ரிக்கு உள்ளதொடர்பு காரணமாக டெல்லி போலீஸார் இவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக உ.பி. போலீ ஸார் மேலும் கூறியதாவது: கடந்த 2007-ம் ஆண்டில் ரவி அத்ரியின் குடும்பம் அவரை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு அனுப்பியது. ரவிஅத்ரி 2012-ல் நுழைவுத் தேர்வில்தேர்ச்சி பெற்று ஹரியாணாவின் ரோத்தக் நகரில் உள்ள பிஜிஐ மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் 4-ம் ஆண்டு தேர்வைஅவர் எழுதவில்லை. அதற்குள்தேர்வு மாஃபியா கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு மற்றமாணவர்களின் பினாமியாக அமர்ந்து தேர்வு எழுதத் தொடங்கினார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.