பாட்னா: பிஹார் மாநிலத்தில் நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ.
அந்த வகையில், பிஹார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது. அப்போது காசியாதீஹ் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிபிஐ அதிகாரிகளை கிராம மக்களில் சிலர் தாக்கியதாகவும், வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிராம மக்களிடம் இருந்து சிபிஐ அதிகாரிகளை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த நபரின் குடும்பத்தார் அதிகாரிகளை குச்சிகளால் தாக்கியதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக கிராம மக்கள் 200 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.