சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும், 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய தகவலியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து வருவாய்த்துறை அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு இணைய வழியில் மின்னணு சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சாதி, வருமானம், இருப்பிடம்,முதல்தலைமுறை பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்டவர், விவசாய வருமானம், கலப்பு திருமணம், வேலையில்லாதவர், விதவை, குடிபெயர்வு, சிறு, குறு விவசாயி, இயற்கை இடர்பாடுகளால் மாணவர்கள் பள்ளி சான்றிதழை இழந்தைதை உறுதிசெய்வது, திருமணமாகாதவர், ஆண் குழந்தை இல்லை, வாரிசு, வசிப்பிடம், சொத்து மதிப்பு, இதரபிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர், ஆதரவற்றவிதவை, ஜெயின் மத சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர், பட்டியலினத்தவர் ஆகிய வகுப்புகளில் இ ருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கான பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ், அடகு வணிகர், கடன் கொடுப்வோர், பொது கட்டிடங்ககள், தற்காலிக பட்டாசு உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, தேசிய தகவல் மையம் மூலம், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு தடையில்லா சான்று, திரையரங்குகளின் சி-படிவ உரிமம் புதுப்பித்தல், நிரந்தர பட்டாசு உரிமம், திட்டமிடப்படாத பகுதிகளில் உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்த மாவட்டஆட்சியரின் ஒப்புதல் பெறுதல் ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.இந்த வகையில் கடந்தாண்டு ஏப்.1ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை 89,66,107 சான்றிதழ்கள் இணைய வழியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.