மும்பை: இந்தியாவுக்குச் சொந்தமானது இந்த நூற்றாண்டு என என்னால் சொல்ல முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “இந்த நிறுவனம் நாளைய தலைவர்களை வளர்த்து வருகிறது. இதன் முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். மேலாண்மை படிப்புகளில் சாதனை புரிகின்றனர். இந்த நிலையம், மாற்றத்தின் ஒரு அச்சாணி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இது பெரிய மாற்றத்தை ஊக்குவிக்கிறது. மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் தாயகமாக விளங்கும் நமது இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த நிறுவனமும் பங்காற்றி வருகிறது. உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேத நாகரிகத்தின் காலங்களிலிருந்து, இந்தியா உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் தாயகமாக உள்ளது. இந்த நிறுவனங்களின் காரணமாக, இந்தியா ஒரு அறிவுசார் சக்தியாக வளர்ந்தது. இந்த நிறுவனங்களின் காரணமாக, இந்தியா அப்போது ராஜதந்திரத்தில் பெரிய சக்தியைக் கொண்டிருந்தது. இந்த நிறுவனங்களால் நமது வர்த்தகம் வளர்ந்தது.
உயர்கல்வி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அதற்கு அதிகாரம் அளிக்கவும் மிகவும் முக்கியமானது. நாளந்தா, தக்ஷிலா ஆகிய பல்கலைக்கழகங்கள் நமது பழமையான ஞானத்தின் களஞ்சியங்களாக இருந்தன. அவை சமூகத்தின் முழுமையான பரிணாம வளர்ச்சிக்கு வழிகாட்டுதலை வழங்கின. இதுபோன்ற திறன் மிக்க நிறுவனங்கள் இருந்தால், சமூகம் இனிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும், நேர்மறை நிறைந்ததாகவும் இருக்கும்.
நீங்கள் நம்பிக்கையையும் சாத்தியங்களையும் உணர வேண்டும். இந்த ஆதார மையங்கள் உயர்ந்த லட்சியங்களுக்கும், வாழ்க்கையின் நடைமுறைத் தேவைகளுக்கும் இடையே இணைக்கப்பட்டு, ஒரு நேர்த்தியான சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பலருக்கு அது பயனளிக்கிறது.
சமத்துவத்தை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான சிறந்த கருவி கல்வி என்று நான் நம்புகிறேன். கல்வி அதிசயங்களைச் செய்கிறது. தரமான கல்வி விஷயங்களை வடிவியல் ஆக்குகிறது. அதிகாரம் அளிப்பதற்கான செயல்முறை கல்வியிலிருந்து பிறக்கிறது. அந்த அதிகாரம் சமூகம், தனிமனிதனுக்கு அப்பாற்பட்டு தேசத்தினுடையது. கல்வி உங்கள் ஆற்றலை வெளிக்கொணரவும், உங்கள் திறமையைப் பயன்படுத்தவும் உதவுகிறது. மேலும், அது உங்கள் கனவுகளையும், விருப்பங்களையும் நனவாக்குவதற்கான ஒரு வாகனமாக மாறுகிறது.
கல்வி என்பது தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கும், புதுமையை ஊக்குவிக்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் உந்து சக்தியாகும். என்னைப் பொறுத்தவரை உயர்கல்வி என்பது நமது பொருளாதார எழுச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நாம் விரும்பும் சமூக முன்னேற்றத்தைப் பதிவு செய்வதற்கும் அடிப்படையானது. நம்மிடம் திறமை இருக்கிறது. நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானது என என்னால் சொல்ல முடியும்.
பழைய மாணவர் சங்கங்களின் கூட்டமைப்புகள் செயல்படவேண்டும். உங்களைப் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் முன்னாள் மாணவர் சங்கங்கள், ஐஐடி-கள், ஐஐஎம்-கள் நம்மிடம் உள்ளபோது ஈடு இணையற்ற ஒரு சிந்தனையாளர் குழு நம்மிடம் இருக்கும். அது கொள்கைகளை உருவாக்க உதவும்.
தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள். மன அழுத்தம் வேண்டாம். பெரிதாக கனவு காணுங்கள். நீங்கள் எதையும் சாதிக்கக்கூடிய காலங்களில் வாழ்கிறீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொடர் ஓட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் உள்ளீர்கள். 2047-ம் ஆண்டிற்குள் நீங்கள் அதை அடைவீர்கள் என்று முழு நம்பிக்கையுடன் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்று தெரிவித்தார்.