மத்தியில் பா.ஜனதா அரசு நீண்ட காலம் நீடிக்காது – மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசுக்கு எதிராக அப்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதையொட்டி மேற்கு வங்காளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21-ந் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தியாகிகள் தினத்தில் பிரமாண்ட பேரணி நடத்துவதை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழக்கமாக கொண்டு உள்ளது. அதன்படி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பின் பேரில் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சிறப்பு அழைப்பாளராக பேரணியில் கலந்து கொண்டார். மம்தா பானர்ஜி உரையாற்றும்போது பா.ஜனதா அரசை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “மத்தியில் பா.ஜனதா ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசாங்கம் அல்ல. விரைவில் கவிழும். வெட்கமற்ற அரசு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மற்றும் பிற வழிகளை தவறாக பயன்படுத்தி ஆட்சியில் தொடர்கிறது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. மேற்கு வங்காளம் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது” என்றார்.

அதைத்தொடர்ந்து, பேரணியில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “மத்தியில் ஆட்சியில் உள்ள வகுப்புவாத சக்திகள் சதிகளை தீட்டி நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. தேசத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தற்காலிக வெற்றியை சுவைக்கலாம். ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்படும். அரசியல் அமைப்பையும், நாட்டையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.