India National Cricket Team: கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐசிசி உலகக் கோப்பை ஒவ்வொரு நான்காண்டுகளில் நடைபெறும். தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதேபோல், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். ஆனால், கடைசி 2017ஆம் ஆண்டில்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) தொடரை சில காரணங்களுக்காக கைவிடப்பட்ட நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய அணி இதுவரை 2002 மற்றும் 2013 ஆகிய இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும், 2000 மற்றும் 2017 ஆகிய இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் இந்திய அணி பிடித்துள்ளது.
ஏன் 2025 சாம்பியன்ஸ் டிராபி முக்கியம்?
2013ஆம் ஆண்டுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டிலும் இறுதிப்போட்டிக்கு வந்த இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றது. 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை தான் வென்றது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கும், 2023 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கும், 2021 மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றும் கோப்பையை நெருங்க முடியவில்லை.
இதில் ரோஹித் சர்மா (Rohit Sharma) டி20 உலகக் கோப்பையை வென்றாலும், தனது தலைமையில் தவறவிட்ட 2023 உலகக் கோப்பைக்கு பதில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல அதிகம் முனைப்பு காட்டுவார். மேலும், கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு நடைபெறும் முதல் ஐசிசி கோப்பை என்பதால் அவரும் இதனை கைப்பற்ற அதிக சிரத்தை எடுப்பார். அந்த வகையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக ரோஹித் சர்மா & கௌதம் கம்பீர் இந்திய ஸ்குவாடை தேர்வு செய்வதிலும் தேர்வு குழுவுடன் இணைந்து முக்கிய பங்கை வகிப்பார்கள் எனலாம்.
இந்திய அணி ஸ்குவாட்…?
இந்திய அணியின் (Team India) ஓப்பனிங்கில் ரோஹித் சர்மா உடன் களமிறங்கப்போவது யார் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோரில் இருவர் மட்டுமே ஸ்குவாடில் தேர்வு செய்யப்படுவார்கள். மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதி எனலாம். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் நிச்சயம் இடம்பெறுவார்கள். நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெறுவார்கள்.
இந்த 3 பந்துவீச்சாளர்கள் நிச்சயம் தேவை
வேகப்பந்துவீச்சில் இந்திய அணியில் தற்போது பும்ராவின் இடம் மட்டுமே உறுதியாகி உள்ளது. ஷமி காயத்தில் இருந்து மீண்டு வருவாரா என்பது தெரியாது. சிராஜ், ஆகாஷ் தீப் போன்றோர் இடம்பெறுவார்களா என்பதும் தெரியாது. அதேபோல், சுழற்பந்துவீச்சில் குல்தீப், சஹால் இருவரில் ஒருவர் மட்டுமே விளையாடுவார்கள் என்பதும் தெரிந்ததுதான். ஆனால் இந்திய அணி இந்த மூன்று பந்துவீச்சாளர்களை நிச்சயம் அணியில் எடுக்க வேண்டும். அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), மயங்க் யாதவ் (Mayank Yadav), யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal) ஆகிய மூன்று பேர் இந்திய அணியில் இடம்பெறுவது அவசியம். இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற இருக்கிறது.
ஏன் இந்த 3 பௌலர்கள்…?
எனவே, அந்த மைதானத்தில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தொடக்க ஸ்பெல்லை வீசினால் எதிரணி பேட்டர்களுக்கு நிச்சயம் அச்சுறுத்துலாக இருக்கும். அதேபோல், மிடில் ஓவர்களில் 5 வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில், ஒன் சேஞ் பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் இருப்பார். ஹர்திக் பாண்டியா, சஹால், ஜடேஜா உள்ளிட்டோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக பங்களிப்பார்கள். டெத் ஓவர்களிலும் அதாவது 38ஆவது ஓவருக்கு பின் மயங்க் யாதவ், அர்ஷ்தீப், பும்ரா ஆகியோர் மாறி மாறி தாக்குதல் தொடுக்க சரியாக இருக்கும். எனவே, இந்திய அணி பும்ரா, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருடன் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், யுஸ்வேந்திர சஹாலும் ஸ்குவாடில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.