புதுடெல்லி: மில்கிபூர் இடைத்தேர்தலில், பாபர் மசூதி வழக்கின் மனுதாரர் இக்பால் அன்சாரி பாஜகவுக்கு மீண்டும் ஆதரவளித்துள்ளார். அயோத்யாவின் மில்கிபூர் தொகுதியில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யாவிலிருந்த பாபர் மசூதி, கடந்த டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. இதை பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் கரசேவையினர் இடித்திருந்தனர். ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் பாபர் அப்போது மசூதி கட்டியதாகப் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நீதிமன்ற வழக்குகள் இருந்தன.
கடைசியாக உச்ச நீதிமன்றம் வந்த மேல்முறையீடு வழக்கின் முக்கிய எதிர்மனுதாரராக இருந்தவர் ஹாசீம் அன்சாரி. இவர், பாபர் மசூதியில் கடைசி முத்தவல்லியாகவும் இருந்தவர். இவரது மறைவுக்கு பின் அவர் மகன் இக்பால் அன்சாரி பாபர் மசூதி வழக்கில் ஆஜராகி வந்தார். இவர் உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயிலுக்கு சாதகமானத் தீர்ப்புக்கு பின் பாஜக பக்கம் சாயத் துவங்கினார்.
இந்நிலையில், இன்று அயோத்யாவின் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இக்பால் அன்சாரி , பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். இக்பால் அன்சாரி, பாபர் மசூதி வழக்கால் அயோத்யா உள்பட உ.பி. முழுவதும் பிரபலமாக இருப்பவர் .இது குறித்து செய்தியாளர்களிடம் இக்பால் அன்சாரி கூறுகையில், ‘முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபின் அயோத்யாவின் முகத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.
எனவே, அயோத்யாவின் வளர்ச்சியை பார்த்து மில்கிபூர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்நகரின் சாலைகளை பெரிதுபடுத்தி, பூங்காக்களையும் அமைத்துள்ளார் முதல்வர் யோகி. இங்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலாவாசிகளால் இந்து, முஸ்லிம் என அனைத்து தரப்பினரும் பலன் பெறுகின்றனர். இதற்காக நான் இங்கு தாமரை மலர்ந்து பாஜக வெற்றிபெற அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
மில்கிபூரில் சமாஜ்வாதியின் எம்எல்ஏவாக அவ்தேஷ் பிரசாத் இருந்தார். மக்களவைத் தேர்தலில் இவர் அயோத்யாவில் போட்டியிட்டு வென்றிருந்தார். இங்கு ராமர் கோயில் கட்டப்பட்ட பின் அயோத்யாவிலேயே பாஜக பெற்ற தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால், மில்கிபூரின் இடைத்தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உருவாகி விட்டது.
இதன் காரணமாக அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்ட மில்கிபூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் யோகியே நேரடி கவனம் செலுத்துகிறார். இக்கட்சி சார்பில் பட்டியலின சமூகத்தின் பாஸ்வான் வேட்பாளராக்கப்பட்டு உள்ளார். சமாஜ்வாதி சார்பில் அவ்தேஷ் பிரசாத்தின் மகன் அஜீத் பிரசாத் போட்டியிருகிறார். இந்த இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இச்சூழலில், முஸ்லிம்களும் கணிசமாக இருக்கும் மில்கிபூரில் இக்பால் அன்சாரியின் பாஜக ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேசமயம், அன்சாரியை விரும்பாத முஸ்லிம்களும் அயோத்யாவில் உள்ளனர்.எனினும், அன்சாரியின் பாஜக ஆதரவு, பல முஸ்லிம்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும், ராமர் கோயில் எதிர்புறம் உள்ள அவரது வீட்டுக்கும் உ.பி. போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், பாஜகவுக்கு அன்சாரி ஆதரவளிப்பது முதன்முறையல்ல. இதற்குமுன், நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி அயோத்யாவில் நடத்திய பிரச்சார ஊர்வலத்தில் அன்சாரியும் இருந்தார்.