திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நிரப்பு விளையை சேர்ந்தவர் அனீஷ். இவருடைய மனைவி பிந்து. இவர்களுடைய மகன் யாதவ் (வயது 8) அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு யாதவின் பாட்டி அந்த பகுதியில் உள்ள கால்வாயின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பாட்டியிடம் செல்வதற்காக யாதவ் ஓடி சென்றான். அந்த சமயத்தில் அங்கு நின்ற தெருநாய் ஒன்று யாதவை பார்த்து குரைத்தபடி கடிப்பது போல ஓடி வந்தது.
இதனால் பயந்து போன யாதவ் கால்வாயின் நடை பாதை வழியாக ஓடியுள்ளான். அப்போது கால் வழுக்கியதால் கால்வாயில் விழுந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பாட்டி செய்வதறியாது கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடையில் விழுந்த யாதவை தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு கால்வாயில் நிரப்புவிளை பகுதியில் இருந்து யாதவை பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாரக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.