இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.
பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது.

இதில் கண்கலங்கியபடி பேசியிருக்கும் கார்த்திக் ராஜா, “பவதாரிணி லீலாவதி ஹாஸ்பிட்டல்ல பிறந்தாள். அவள் பிறந்தவுடன் அவளை முதன் முதலாகக் கொஞ்சிய அண்ணன் நான். எப்போதும் யுவன் கூட கொஞ்சிக் கொஞ்சி விளையாடிட்டு இருப்பாள்.
அவள் இலங்கையில் காலமாகி, தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும்போது, இங்கிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் பவதாரிணிய அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். அந்த அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் மிகவும் தன்மையானவர்கள்.

இப்போது அவளின் பாடல்களை இந்த நிகழ்சியில் இசைக் கச்சேரியாக நடத்துகிறோம். அவளுக்கு இது போன்ற இசை நிகழ்ச்சிகள் ரொம்பப் பிடிக்கும். மேடையில் ரொம்பப் பதற்றத்துடனே இருப்பாள். பவதாரிணிக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை. எனக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசை. ஆனால், அம்மா பவதாரிணிக்கு நல்ல குரல் இருக்குனு, பாட வைச்சாங்க” என்று பேசியிருக்கிறார்.