“அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” – கே.பி.முனுசாமி நம்பிக்கை

கிருஷ்ணகிரி: “எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களை சந்திக்கும் திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா நடந்தது. ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் வடிவேல் வரவேற்றார். திண்ணை பிரச்சாரத்தை, கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்கள், சாதனை விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியது: “அரசியலில் மிகப் பெரிய அனுபவம், ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர் செங்கோட்டையன். அவரை ஜெயலலிதா மதிப்பும், மரியாதையுடன் நடத்தினார். அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் நடத்திச் செல்கிறார். அவரது மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, கட்சியை காட்டி கொடுத்துவிட்டு எதிரணியில் சேர்ந்து அமைச்சராக இருக்கிறார். ஆனால், எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது.

ஒன்றிணைவதில் எனக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை எனக் கூறும் ஓபிஎஸ், அடுத்த கணமே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார். கட்சியை எதிர்த்தும், எதிரிகளுடன் இணைந்து களத்தில் நிற்கிறார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு ஜானகியம்மாள் பெருந்தன்மையுடன் கட்சியில் இருந்து விலகி, தலைமைக் கழகத்தை வழங்கிவிட்டு சென்றார். ஆனால், கட்சியில் சிலர் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, வசதிகளை பெருக்கிக் கொண்டு இக்கட்சியை சிதைக்க நினைக்கிறார்கள். இது என்ன மாதிரியான நிலை? எடப்பாடி பழனிசாமி குறித்து பேச டிடிவி தினகரனுக்கு எவ்வித தகுதியும், தார்மிக உரிமையும் கிடையாது. அரசியல் ரீதியாக எதிரணியாக எங்களை விமர்சிக்கலாம். ஆனால் எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு அவருக்கு உரிமையில்லை.

ஒரு கட்சியின் தலைவராகவும் நடிகராகவும் இருக்கக் கூடிய விஜய், செல்லும் இடத்தில் கூட்டம் சேரும் என்ற அடிப்படையில் அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக அவரை சந்தோஷப்படுத்துவதற்காக கொடுத்திருந்தால்? பாஜகவின் வரலாறு எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒரு கட்சியில் பிளவு ஏற்படும்போது விதி 15-ன் அடிப்படையில் சின்னங்கள் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் உள்ளே நுழைவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் விசாரித்தால் மகிழ்ச்சி. நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.