விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதன்மூலம் விண்வெளியில் பாரதம் சதம் அடித்திருக்கிறது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 460 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.
இஸ்ரோவில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் முதல் விருப்பத் தேர்வாக விண்வெளி துறை மாறியிருக்கிறது. இந்த துறையில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
பிப்ரவரி 28-ம் தேதி அறிவியல் தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி நமது பிள்ளைகள், இளைஞர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பாரத மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்களும் ஒருநாள் விஞ்ஞானியாக வாழ்ந்து பாருங்கள். ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து அந்த நாளில் ஆய்வுக்கூடம், கோளரங்கம், விண்வெளி மையத்துக்கு செல்லுங்கள். இதன்மூலம் அறிவியல் மீதான உங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.
ஏஐ துறையில் சாதனை: விண்வெளி, அறிவியல் துறைகளை போன்று மேலும் ஒரு துறையில் பாரதம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அந்த துறை ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு. அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் பங்கேற்றேன்.
அங்கு பாரத நிபுணர்களின் செயற்கை நுண்ணறிவு படைப்புகளை பார்த்து வியந்தேன். குறிப்பாக தெலங்கானாவின் ஆதிலாபாத் அரசு பள்ளி ஆசிரியர் தோடாஸம் கைலாஷ் என்பவர் கோலாமீ என்ற பழங்குடி மொழியை காப்பாற்ற ஏஐ துணையோடு அந்த மொழியில் பல்வேறு பாடல்களுக்கு மெட்டமைத்து உள்ளார். இவருடைய பாடல்கள் பழங்குடியின பெண்களின் விருப்ப பாடல்களாக உள்ளன. விண்வெளி மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவிலும் நமது இளைஞர்கள் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். புதிய தொழில்நுட்பங்களை ஏற்பதிலும், கையாள்வதிலும் பாரத மக்கள் யாருக்குமே சளைத்தவர்கள் கிடையாது.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு: எட்டு பேரில் ஒருவர், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறார். குறிப்பாக குழந்தைகளிடம் உடல் பருமன் பிரச்சினை நான்கு மடங்கு வரை அதிகரித்திருக்கிறது. உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு வித்திடுகிறது. இந்த சவாலை மிகச் சிறிய முயற்சிகள் மூலம் எதிர்கொள்ள முடியும். அதாவது, சமையல் எண்ணெய் வாங்கும்போது பத்து சதவீதம் குறைவாக வாங்குங்கள். இதன்மூலம் உங்கள் உணவில் 10% அளவுக்கு எண்ணெய் குறையும். உடற் பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுங்கள். இதன்மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்.
ஆசிய சிங்கம், ஹன்குல், பிக்மி ஹாக்ஸ், சிங்கவால் குரங்கு இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவை உலகில் வேறு எங்குமே இல்லை. நமது தேசத்தில் மட்டுமே இருக்கிறது. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.
நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு தாவரங்களும், வன விலங்குகள் பின்னிப் பிணைந்துள்ளன. பல உயிரினங்கள் நமது தெய்வங்களின் வாகனங்களாக உள்ளன. பகவான் ஐயப்பனுக்கும் புலிக்கும் இருக்கும் உறவு மிகவும் ஆழமானது. போன்பீபி தேவியின் வாகனமாகவும் புலி இருக்கிறது. கர்நாடகாவில் ஹுலி வேஷா, தமிழ்நாட்டில் புலியாட்டம், கேரளாவில் புலிக்களி போன்ற கலாச்சார நடனங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன.
தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு காலம் ஆகும். மாணவ, மாணவியர் சிறப்பாக தேர்வு எழுத வாழ்த்துகிறேன். எவ்வித அழுத்தமும் இல்லாமல் தேர்வு எழுத அறிவுறுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மகளிருக்காக பிரதமரின் சமூக ஊடகம்: பண்டைய காலம் முதலே பாரதத்தில் பெண்களை போற்றி வணங்கி வருகிறோம். கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பாரத பெண்கள் சார்பில் முதல் தேசிய கொடியை ஹன்சா ஜீவராஜ் மேத்தா அறிமுகம் செய்தார். இந்த ஆண்டு மகளிர் தினத்தில் என்னுடைய சமூக ஊடக கணக்குகளான எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவை பெண்களுக்காக அர்ப்பணிக்கப்படும். இதன்படி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் மார்ச் 8-ம் தேதி தங்களுடைய பணிகள், அனுபவங்களை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் மக்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.