புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி கோமாவில் இருக்கும் மகளைப் பார்க்க தனக்கு அமெரிக்கா செல்ல அவசர விசா வழங்க வேண்டும் என்று மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவருக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தங்கிப் படித்து வருகிறார். பிப்.14-ம் தேதி அங்கு நடந்த விபத்தில் சிக்கிய நீலம் தற்போது கோமாவில் உள்ளார். அவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதியதில், எலும்பு முறிவு, தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னனியில் நீலம் ஷிண்டேவின் தந்தையான தானாஜி ஷிண்டே மகளைக் காண அவசர விசா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நீலம் குடும்பத்துக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுலே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய மாணவி நீலம் ஷிண்டே அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ அவசரநிலையில் சூழ்நிலையில் மகாராஷ்டிராவின் சதாராவில் வசிக்கும் மாணவியின் தந்தை தானாஜி ஷிண்டே தன் மகளைக் காணச் செல்ல வேண்டியதுள்ளது. தானாஜி ஷிண்டே அவசர விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்க தூதரகம் இந்த விஷயத்தை ஆய்வு செய்து உரிய உதவிகள் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவியின் தந்தை தானாஜி கூறுகையில், “பிப்ரவரி 16ம் தேதி எனது மகள் விபத்தினை சந்தித்ததாக தகவல் வந்தது. அன்றிலிருந்து விசாவுக்காக நான் முயற்சித்து வருகிறேன். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மாணவியின் உறவினரான சஞ்சய் கதம் கூறுகையில், “நீலமை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிப்.16-ம் தேதி அவளின் அறைத்தோழிகள் நீலம் பெரும் விபத்தில் சிக்கியதாக தெரிவித்தனர். அவளுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் எங்களின் அனுமதியை கேட்கின்றனர். நீலம் இன்னும் கோமாவில் தான் இருக்கிறார். இப்போது நாங்கள் அவளுடன் இருக்க வேண்டியது அவசியம்.” என்று தெரிவித்துள்ளார்.