‘இது உளவியல், அரசியல் அடி…’ – ஆயுத உதவிகளை நிறுத்திய அமெரிக்கா மீதான உக்ரைன் பார்வை

கீவ்: ‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது’ என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைனின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஒலெக்சாண்டர் மெரேஷ்கோ கூறுகையில், “இப்போது உதவிகளை நிறுத்துவது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உதவுவதேயாகும். மேலோட்டமாக பார்த்தாலே இது மோசமானது. அவர் எங்களைச் சரணடைவதை நோக்கித் தள்ளுவது போலத் தோன்றுகிறது. அதாவது ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்பது நோக்கிய நகர்வு இது.

இதில் முக்கியான விஷயம் என்னவென்றால், இது ஓர் உளவியல் அடி. உக்ரைன் மீதான அரசியல் அடி. இது எங்களின் மன உறுதிக்கு உதவாது. இது முனீச் ஒப்பந்தத்தை விட (1938-ம் ஆண்டு முனீச் ஒப்பந்தம்) விடக் கொடுமையானது. ஏனென்றால், அங்கு அவர்கள் செக்கோஸ்லோவாகியாவை ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்கவில்லை. ஆனால், இங்கோ ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களையே அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

பின்னணி என்ன? – 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக நிறுத்தி வந்தார். இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான பீரங்கிகள், ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தற்போதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. வரும் மேமாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்கா கைவிட்ட நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த நாட்டுக்கு தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வோம். இதை அமெரிக்காவிடம் சமர்ப்பிப்போம்.

எங்களை பொறுத்தவரை உக்ரைனின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய அமைதிப் படையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா இடையே சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நாளில் இருந்து போரின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.