கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா

மும்பை,

மராட்டிய மாநில உணவுத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தனஞ்செய் முண்டே. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

இதனிடையே, மராட்டியத்தின் பீட் மாவட்டம் மசாஜோ கிராம பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வீட்டில் இருந்து கடத்தப்பட்டு கொடூரமான முறையில் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மந்திரி தனஞ்செய் முண்டேவின் உதவியாளர் வால்மிக் கரட் போலீசில் சரணடைந்தார்.

மசாஜோ கிராமத்தில் மும்பையை சேர்ந்த காற்றாலை மின் உற்பத்தில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் தனஞ்செய் முண்டேவின் உதவியாளர் வாலிமிக் கரட் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால், கிராமத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த வாலிமிக் கரட்டை பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால், வாலிமிக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சந்தோஷ் தேஷ்முக்கை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், வாலிமிக் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் குறித்த பல்வேறு தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தோஷ் தேஷ்முக் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின.

இந்த சம்பவத்தில் மந்திரி தனஞ்செய் முண்டேவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கு பூதாகாரமாகி வரும் நிலையில் தனஞ்செய் முண்டே உணவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தனஞ்செய் முண்டே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தனஞ்செய் முண்டே தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.