நகர்ப்புற நக்சல்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஊடகங்களில் நாள்தோறும் ஊழல்கள் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஊடகங்களில் ஊழல் குறித்த செய்திகள் ஒழிந்து, வளர்ச்சி திட்டங்கள் குறித்த செய்திகள் பிரதான இடம் பிடித்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் ஒருவர் கூறும்போது, மக்கள் நலத்திட்டத்துக்கு ஒரு ரூபாயை ஒதுக்கினால் 85 பைசா இடைத்தரகர்களுக்கும் 15 பைசா மட்டுமே மக்களுக்கும் சென்றடைகிறது என்று தெரிவித்தார். இப்போது மானிய உதவிகள் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஒரு பைசாவைகூட இடைத்தரகர்களால் பறிக்க முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளான பிறகும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில்தான் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. விரைவில் 3-வது இடத்தை நாம் எட்டி பிடிக்க உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்தோம். இப்போது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டின் சூரிய மின் உற்பத்தி 30 மடங்கு அதிகரித்திருக்கிறது. சர்வதேச உருக்கு உற்பத்தியில் 2-ம் இடம், அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் 3-வது இடம் என பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறோம். விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்திருக்கிறது.
விண்வெளி துறையில் இஸ்ரோ மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. நாடு முழுவதும் விண்வெளி துறை சார்ந்த 250 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்கள் சார்பில் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படுகின்றன. அணு சக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின் அணு மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும்.
இந்திய இளைஞர்கள் புதுமையான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகின்றனர். ஸ்மார்ட் இந்தியா திட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சவாலான பிரச்சினைகளுக்கு இவர்கள் எளிய தீர்வினை கண்டறிந்து உள்ளனர்.
பிஎம் அவாஸ் யோஜ்னா திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. ஏழை பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதேபோல பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் வனப்பகுதிகளில் இருந்து நக்சல் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நக்சல் தீவிரவாத ஒழிப்பு பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆனால் நகர்ப்புற நக்சல்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளனர். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் நமது பாரம்பரியத்துக்கும் எதிராக போர்க்கொடி உயர்த்துகின்றனர். சில அரசியல் கட்சிகளுக்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். இப்போதைய சூழலில் நகர்ப்புற நக்சல்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.