நவ்சாரி: பெண்களின் உரிமைகளுக்கு எங்கள் அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துவித பயம் மற்றும் சந்தேகங்களைத் தாண்டி பெண் சக்தி உயர்ந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் அரசு, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “மகளிர் தினமான இன்றைய நாள் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது. இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் எனக்கு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. பணத்தின் அடிப்படையில் அல்லாமல், கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசீர்வாதங்களால் உலகின் பெரிய பணக்காரராக என்னைக் கருதுகிறேன். இந்த ஆசிர்வாதங்கள் எனது மிகப் பெரிய பலம், மூலதனம், பாதுகாப்பு கேடயம்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் பாதையில் இந்தியா தற்போது நடைபோட்டு வருகிறது. பெண்களின் வாழ்க்கையில் மரியாதை, வசதி ஆகிய இரண்டிற்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. கோடிக்கணக்கான பெண்களுக்காக கழிப்பறைகள் கட்டப்படுவது அவர்களின் கண்ணியத்தை அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதன்மூலம் அவர்கள் வங்கி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார்கள்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான குஜராத் அரசின் ஜி-சஃபல் எனும் திட்டம், கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் ஜி-மைத்ரி திட்டம் ஆகியவை இன்று தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புகையின் கஷ்டங்களிலிருந்து பெண்களைக் காப்பாற்ற உஜ்வாலா சிலிண்டர்களை அரசு வழங்குகிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அரசு நீட்டித்துள்ளது. முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்ற முஸ்லிம் சகோதரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, லட்சக்கணக்கான முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு நடைமுறையில் இருந்தபோது, பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்கள் மாநிலத்திற்கு வெளியே யாரையாவது திருமணம் செய்து கொண்டால், அவர்கள் மூதாதையர்களின் சொத்துக்கள் மீதான உரிமையை இழந்தனர். 370 வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள் இப்போது தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
சமூகம், அரசு, பெரிய நிறுவனங்கள் என பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசியல், விளையாட்டு, நீதித்துறை, காவல்துறை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். 2014-ம் ஆண்டு முதல், முக்கிய பதவிகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போதைய மத்திய அரசு அதிக எண்ணிக்கையிலான பெண் அமைச்சர்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு நாடாக உள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி புத்தொழில் நிறுவனங்கள் தலைமைப் பொறுப்புகளில் பெண்களைக் கொண்டுள்ளன. முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கு பெண் விஞ்ஞானிகள் தலைமை தாங்குகிறார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகளை இந்தியா கொண்டுள்ளது. நவ்சாரியில் இந்த நிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண் காவல் அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர்.
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் நான் கலந்துரையாடினேன். அவர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை இந்திய பெண்களின் வலிமைக்கு சான்று. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானம் நிறைவேறும். இந்த இலக்கை அடைவதில் பெண்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் அரசு, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 800 நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இப்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நீதிமன்றங்கள் பாலியல் வன்கொடுமை, போக்சோ தொடர்பான சுமார் மூன்று லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதை விரைவுபடுத்தியுள்ளன. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு மகன் தனது தாய்க்கு சேவை செய்வதைப் போல, பாரத தாய்க்கும், இந்தியாவின் தாய்மார்கள், மகள்களுக்கும் நான் சேவை செய்து வருகிறேன். மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆசிர்வாதங்கள் ஆகியவை 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய உதவும். நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய், சகோதரி, மகளுக்கும் மகளிர் தினத்திற்கான தமது இதயப்பூர்வமான வாழ்த்துகளை மீண்டும் தெரித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார். குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.