கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்ற மத்தியப் பிரதேச அரசு முடிவு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “‘லவ் ஜிஹாத்’ சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் சட்டத்தை எனது அரசு கொண்டு வரும். மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் அனுமதிக்கப்பட மாட்டாது.

எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களை எங்கள் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக் கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அந்த சட்டம் திருத்தப்படும்” என்று கூறினார்.

முதல்வர் மோகன் யாதவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிஃப் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், “போபாலில் ஒரு பெண் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். நாம் அவரைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பது எப்போதும் அவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் கடந்த 2021 மார்ச் 8 அன்று மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தற்போது மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.