முகத்தில் அதிக முடிகள்..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய இளைஞர்

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித் பட்டிடார் (வயது 18), இவருக்கு ஏற்பட்டுள்ள ‘வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்’ என்றழைக்கப்படும் ஹைப்பர்ட்ரைக்கோஸிஸ் எனும் மரபணு மாற்றத்தினால் அவரது முகம் முழுவதும் நீளமான முடிகள் வளர்ந்துள்ளது. இதனால், குழந்தைப் பருவம் முதல் பல்வேறு வகையான சோதனைகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டாலும், அவர் மனம் தளராமல் தனது அன்றாட வாழ்க்கையை பதிவு செய்து தனது யூட்டியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் இத்தாலி நாட்டின் மிலான் நகரத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது, மருத்துவ நிபுணர்கள் அவரது முகத்தின் சிறிய பகுதியிலுள்ள முடிக்களை சவரம் செய்து எண்ணி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அவரது முகத்தின் ஒரு சதுர செண்டி மீட்டர் அளவில் 201.72 முடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், இந்த அங்கீகாரத்தினால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘வேர்வுல்ப் சிண்ட்ரோம்’ என அறியப்பட்டு வரும் இந்த மரபனு மாற்றமானது தற்போது வரை உலகளவில் 50 பேரிடம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.