டொமினிகன் குடியரசு நாட்டில் இந்திய வம்சாவளி மாணவி மாயம்

நியூயார்க்:

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி சுதிக்சா கோணங்கி (வயது 20), கடந்த சில தினங்களுக்கு முன்பு, சக மாணவிகளுடன் டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த 5-ம் தேதி அங்குள்ள பன்டா கனா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்ற அவர் அதன் பின் தனது அறைக்கு திரும்பவில்லை.

அவர் காணாமல் போனதாக உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

கடற்கரையில் வாக்கிங் சென்றபோது அவர் காணாமல் போயிருக்கலாம் என டொமினிகன் குடியரசு நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவி கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, கடற்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதிக்சா அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர். அவர்களின் குடும்பத்தினர் விர்ஜினியா மாநிலம் லவுடவுன் கவுண்டியில் வசித்து வருகின்றனர்.

மாணவி என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. எனவே, கடற்பகுதியில் தேடலைத் தாண்டி விசாரணையை விரிவுபடுத்துமாறு அவரது தந்தை சுப்பராயுடு கோணங்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் டொமினிகன் குடியரசுக்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனமுடன் இருக்கும்படி அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.