IPL 2025 Punjab Kings: ஐபிஎல் 2025 தொடர் (Indian Premier League) நெருங்கிவிட்டது. இன்னும் 9 நாள்களில் கொல்கத்தா நகரில் பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.
IPL 2025 PBKS: பார்த்தாலே பயமுறுத்தும் பஞ்சாப் கிங்ஸ்
தலா 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடந்த முறை பிளே ஆப் வரை வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த முறையும் தொடரில் ஆதிக்கம் செலுத்த கடினமான முயற்சிகளை எடுக்கும். குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் கடந்த முறை சொதப்பியிருந்தாலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாட எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
இந்த முறை 10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால் எந்த அணி பலமாக இருக்கிறது, எந்த அணி பலவீனமாக இருக்கிறது, எந்தெந்த வீரர்கள் தற்போது பார்மில் இருக்கிறார்கள், ஒவ்வொரு அணியின் காம்பினேஷன்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், பேப்பரிலேயே பலமாக தோற்றமளிக்கும் ஒரு அணியாக பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) திகழ்கிறது.
IPL 2025 PBKS: புதுப்பொழிவுடன் பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆகிய இரண்டு வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன் தக்கவைத்தது. ஏலத்தில் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி கொடுத்து RTM மூலம் எடுத்தது. ஹர்பிரீத் ப்ரரை ரூ.1.50 கோடி கொடுத்தும் எடுத்தது. இவர்களை தவிர மற்ற அனைவருமே பஞ்சாப் அணிக்கு புதிதுதான். கேப்டன் புதிது, தலைமை பயிற்சியாளர் புதிது, பேட்டிங் ஆர்டர் புதிது, பந்துவீச்சு படை புதிது. அதிக தொகையை கொண்டு ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் பலமான புதிய அணியை கட்டுமைத்திருக்கிறது.
கொல்கத்தாவுக்கு கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வந்து கேப்டன்ஸி பொறுப்பை பெற்றிருக்கிறார். அதேபோல், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) தற்போது பஞ்சாப் அணிக்கு வந்துள்ளார். ரிக்கி பாண்டிங் – ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி டெல்லி அணியை 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
IPL 2025 PBKS: பலமான பஞ்சாப்பின் பேட்டிங் ஆர்டர்
இதையடுத்து, பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜாஸ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் இவர்களிடம் இந்திய மற்றும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களும் கொட்டிக்கிடக்கிறார்கள். மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் ப்ரர், ஆரோன் ஹார்டி உள்ளிட்ட நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.
IPL 2025 PBKS: அனல் பறக்கும் பஞ்சாப்பின் பந்துவீச்சு படை
பந்துவீச்சு படையில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், வைஷாக் விஜயகுமார், யாஷ் தாக்கூர், லோக்கி பெர்குசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். விஷ்ணு வினோத், முஷீர் கான், பிரயான்ஷ் ஆர்யா, குல்தீப் சென், பிரவின் தூபே என திறமையான உள்நாட்டு வீரர்களும் நிறைந்திருக்கிறார்கள். பஞ்சாப் அணி வரும் மார்ச் 25ஆம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியை விளையாட இருக்கிறது.
IPL 2025 PBKS: பிளே ஆப் வருமா பஞ்சாப் கிங்ஸ்?
அந்த வகையில், அனைத்து வகைகளிலும் சிறப்பான வீரர்களை பஞ்சாப் அணி பெற்றிருப்பதால் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த கோப்பையை வெல்லும் முனைப்பில் மூர்க்கமாக இருக்கிறார் எனலாம். பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக 2014இல் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்து, கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தது. அதன்பின், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு ஒருமுறை கூட தகுதிபெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2025 PBKS: பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்
பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ஜாஷ் இங்கிலிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், யாஷ் தாக்கூர்/ வைஷாக் விஜய் குமார் (இம்பாக்ட் வீரர்கள்)