டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு 7 ஆண்டுகளாக மாதம் ரூ.31 லட்சம் செலவு செய்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் ’’ என டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்தை அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.52 கோடி செலவில் புதுப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கேஜ்ரிவாலின் ‘சீஸ் மஹால்’ என டெல்லி முதல்வர் இல்லம் குறித்து பாஜக பிரச்சாரம் செய்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செலவழிக்கப்பட்ட பராமரிப்புத் தொகையை தெரிவிக்கும்படி ஆர்டிஐ மூலம் கேட்டுள்ளார். அதற்கு டெல்லி அரசு கடந்த 2023-ம் ஆண்டு அளித்த பதில் கடிதத்தில் தெரிவித்த விவரங்கள் குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு 7 ஆண்டுகளில் பராமரிப்பு செலவுக்கு ரூ.29.56 கோடி செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ரூ.3.69 கோடி செலவிடப்பட்டுள்ளது. மிகப் பெரிய தொழிலதிபர்களின் சொத்துக்களை பராமரிக்கக் கூட இவ்வளவு அதிகம் செலவாகாது. டெல்லியில் ரூ.3 கோடி செலவில் மாளிகையே கட்டிவிடலாம். ஆனால் பராமரிப்புக்கே இவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை கேஜ்ரிவால் வாழ்ந்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. இது குறித்து கேஜ்ரிவால் பதில் அளிப்பது இல்லை. அரசு இல்லத்துக்கு சராசரியாக மாதம் ரூ.31 லட்சம் செலவு செய்தது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லி மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு வீரேந்திர சச்தேவா கூறியுள்ளார்.