IPL 2025, Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் குறைந்தபட்சம் 3 போட்டிகளை விளையாடிவிட்டன. டெல்லியை தவிர அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 1 தோல்வியையும் பதிவு செய்து இருக்கின்றனர். எனவே இன்னும் எந்தெந்த அணிகள் பிளே ஆப் தகுதிபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
IPL 2025 CSK: சிஎஸ்கேவில் இளம் வீரர்களே இல்லையா…
இருப்பினும், சிஎஸ்கேவை பொறுத்தவரை மிக மிக சொதப்பலான அணியாக இருக்கிறது எனலாம். மிடில் ஆர்டரில் நிலையான வீரர் யாருமே இல்லாத நிலையில் டாப் ஆர்டர் சொதப்பினால் பேட்டிங் முழுமையாக சரிந்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டு சிஎஸ்கே மீது இருக்கிறது. அதேபோல், சிஎஸ்கே ஒரு வயதானவர்களின் அணியாகவே தோற்றமளிக்கிறது என்றும் குறை சொல்லப்படுகிறது. அது உண்மையும் கூட… மற்ற அணிகளை ஒப்பிடும்போது சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்திய இளம் வீரர்கள் என யாருமில்லை. நூர் அகமது, பதிரானா, ரச்சின் ரவீந்திரா போன்ற வெளிநாட்டு இளம் வீரர்கள் நிறைந்திருந்தாலும் இந்திய வீரர்களை பொறுத்தவரை பெரிதாக யாருமே இல்லை.
IPL 2025 CSK: கவனம் பெறும் இந்த 3 இளம் வீரர்கள்
மிடில் ஆர்டரில் இளம் திறமைகளை நம்பாமல் அவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதே சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணி அடுத்து, பஞ்சாப்பின் முலான்பூரில் நாளை மறுதினம் (ஏப். 8) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்த 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதால் நிச்சயம் சிஎஸ்கே பலம்பெற வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025 CSK: ஷேக் ரஷீத்
சிஎஸ்கே அணியில் கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் 8 ஓவர்களையே வீசினர். நூர் அகமது சிறப்பாக பந்துவீசி வருகிறார். மற்ற ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் பெரிதாக கைக்கொடுப்பதில்லை.
பேட்டிங்கும் சுத்த மோசம் எனலாம். அப்படியிருக்க இந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரில் ஒருவரை மட்டும் பிளேயிங் லெவனில் வைத்துவிட்டு, 20 வயதான ஷேக் ரஷீத்தை (Shaik Rasheed) விளையாட வைக்கலாம். பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார் என தகவல்கள் வருகின்றன. இவர் ஓரிரு ஓவர்களையும் வீசும் திறனை வைத்திருக்கிறார். லெக் பிரேக் சுழற்பந்துவீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு.
IPL 2025 CSK: அன்ஷூல் கம்போஜ்
முகேஷ் சௌத்ரிக்கு பதில் அடுத்த போட்டியில் அன்ஷூல் கம்போஜை (Anshul Kamboj) உள்ளே கொண்டு வரலாம். கடந்த போட்டியில் முகேஷ் சௌத்ரி 50 ரன்களை கொடுத்திருந்தார். அவர் சிறப்பான பந்துவீச்சாளர் என்றாலும் சமீபத்திய உள்நாட்டு போட்டிகளில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை.
எனவே அவருக்கு பதில் 24 வயதான அன்ஷூல் கம்போஜை சேர்க்கலாம். இவர் பவர்பிளேவில் அட்டகாசமாக பந்துவீசுவார். கலீல் அகமது உடன் சேர்ந்து பவர்பிளேவில் தாக்குதல் தொடுக்க அன்ஷூல் கம்போஜ் சிறப்பாக கைக்கொடுப்பார். மிடில் ஓவர்களில் ஒன்றும், டெத் ஓவர்களில் ஒன்றும் கூட இவரை வீச வைக்கலாம்.
IPL 2025 CSK: வன்ஷ் பேடி
மேற்கூறிய 2 மாற்றங்களே போதுமானது என்றாலும் மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் இடத்தில் 22 வயதான வன்ஷ் பேடிக்கும் (Vansh Bedi) கூட ஒரு வாய்ப்பை வழங்கி பார்க்கலாம். நம்பர் 4 இடத்தில் வன்ஷ் பேடி டெல்லி பிரீமியர் லீக்கில் பெரியளவில் ரன்களை குவித்திருக்கிறார். டெல்லி பிரீமியர் லீக்கின் தரம் வேறு, ஐபிஎல் தொடரின் தரம் வேறு என்றாலும் அவர் நல்ல பார்மில் இருக்கும்பட்சத்தில் இளம் வீரரை நம்பி களமிறக்கலாம். அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.