IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளும் 10 விதமாக இருந்தாலும் அதில் தனித்து தெரியும் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. 3 போட்டிகளை விளையாடி உள்ளது. மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை பேட்டர்கள் மற்றும் பௌலர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளை சந்தித்தார்கள்.
IPL 2025: டெல்லியின் ஆதிக்கம்…
லக்னோவுக்கு எதிரான போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டுசென்று பரபரப்பான முறையில் வெற்றி பெற்றனர். ஹைதராபாத் போட்டியை விரைவாக சேஸிங் செய்து வெற்றிபெற்றனர். அதே நேரத்தில், சிஎஸ்கேவை அவர்களின் கோட்டையான சேப்பாக்கத்திற்கே வந்து முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றிவாகை சூடியிருக்கிறது. கடந்தாண்டு சற்று ஏற்ற இறக்கமாக இருந்த டெல்லி அணிக்கு, இந்தாண்டு அனைத்தும் சாதகமாக இருக்கிறது.
IPL 2025: மொத்தமாக மாறிய டெல்லி கேப்பிடல்ஸ்
ரிஷப் பண்டை அணியில் இருந்து விடுவிப்பதற்கு முன்னரே, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை விடுவித்தது டெல்லி கேப்பிடல்ஸ். தொடர்ந்து ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராகவும், வேணுகோபால் ராவ் கிரிக்கெட் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர். பலரும் எதிர்பாராத விதமாக கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு எடுத்தாலும், ரூ.16.50 கோடிக்கு எடுத்த அக்சர் பட்டேலை கேப்டனாக்கியது.
IPL 2025: மிரட்டலான பௌலிங், கிளாசான பேட்டிங்
வேகப்பந்துவீச்சில் ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா; சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் – இதில் புதுமுகமாக விப்ராஜ் நிகம் என முழுமையான பௌலிங் யூனிட்டாக டெல்லி தோற்றமளிக்கிறது. நடராஜன் வெளியில் இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பேட்டிங்கை பொறுத்தவரை டூ பிளெசிஸ், பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ஸ்டப்ஸ், அஷூடோஷ் சர்மா, அக்சர் பட்டேல் இருக்க ஹாரி ப்ரூக் கம்பி நீட்டிவிட கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தற்போது விளையாடி அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். இப்படி அணி முழுமையான ஆட்டத்தை விளையாடிவர அவர்களின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கெவின் பீட்டர்சனும் ஒரு காரணம் எனலாம்.
IPL 2025: சின்ன பிரேக் எடுக்கும் பீட்டர்சன்
லக்னோவுக்கு எதிரான போட்டியில் அஷூடோஷ் சர்மா வின்னிங் ஷாட்டை அடித்ததும் மைதானத்தில் இருந்து பெவிலியனில் இருக்கும் கெவின் பீட்டர்சனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்கை காட்டியது நாம் பார்த்திருப்போம். இதன்மூலம் அவர் அணிக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர முடிகிறது. அப்படியிருக்க தற்போது அவர் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அணியில் இருந்து சின்ன பிரேக் எடுத்திருக்கிறாராம்.
சிஎஸ்கே உடனான போட்டிக்கு பின்னர் டெல்லி அணி வரும் ஏப். 10ஆம் தேதிதான் ஆர்சியை அணியை சந்திக்கிறது, இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. அதற்கு அடுத்து ஏப். 13ஆம் தேதி மும்பை அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதன் ஹாம் மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சந்திக்க இருக்கிறது.
IPL 2025: பீட்டர்சன் பிரேக் எடுக்க என்ன காரணம்?
அந்த வகையில், கெவின் பீட்டர்சன் டெல்லி அணியில் இருந்து சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மாலத்தீவுக்கு சென்றுள்ளாராம். இதையடுத்து, ஆர்சிபி அணியுடனான போட்டியில் அவர் டெல்லி அணியுடன் இருக்க மாட்டாராம். அடுத்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் அணியுடன் இணைவாராம். இந்தியாவில் வெயில் அதிகமாக இருப்பதால் சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | Exclusive: சிஎஸ்கே தோல்விக்கு பிசிசிஐ போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்!