கொழும்பு: மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்திய மறுநாள், இலங்கை அரசு சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை விடுவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில் சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்கவை கொழும்புவில் சந்தித்துப் பேசினார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்சினை முக்கிய பங்காற்றியிருந்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் திசாநாயக்கவுடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து விவாதித்தோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுமுறையைப் பின்பற்றுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையில் இருக்கும் குறுகிய நீர்பரப்பான பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பலவந்தமாக தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனிடையே சனிக்கிழமை செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பிரதமரின் உரையில் குறிப்பிட்டது போல, மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான மற்றும் ஆக்கபூர்வமான அணுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஏனெனில் கடைசியில் இது இரண்டு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை.
அந்தநாளின் இறுதியில், இது இரண்டு நாட்டு மீனவர்களின் அன்றாட பிரச்சினையாகி விட்டது, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தின.” என்று தெரிவித்தார்.