Airtel Sim 10 Minutes Delivery: பார்தி ஏர்டெல் (Bharati Airtel) நிறுவனம் அதன் சிம் டெலிவரி சேவைக்கு, பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் இதுபோன்ற முன்னெடுப்பு முதல்முதலாக நடைபெறுகிறது எனலாம்.
Airtel Sim Blinkit: டெலிவரிக்கு கட்டணம் எவ்வளவு?
ஏர்டெல் சிம் டெலிவரியை நாட்டின் 16 நகரங்களில் பிளிங்கிட் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. வருங்காலத்தில் நகரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், நீங்கள் வீட்டில் இருந்தே ஏர்டெல் சிம்மை ஆர்டர் செய்தால் வெறும் 10 நிமிடங்களில் உங்கள் கைகளில் பெறலாம்.
ஆம், நீங்கள் வாசித்தது சரி. பிளிங்கிட் செயலி மூலம் நீங்கள் ஆர்டர் செய்தீர்கள் என்றால் சிம் கட்டணத்தை தவிர்த்து வசதி கட்டணமாக 49 ரூபாயை செலுத்த வேண்டும். ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் உங்களின் உள்ளங்கையில் இருக்கும் சிம் கார்டை நீங்கள் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். அதாவது, எளிமையான ஆதார் அட்டை அடிப்படையிலான KYC சரிபார்ப்பு செயல்முறையை செய்தாலே போதுமானது.
Airtel Sim Blinkit: KYC சரிபார்ப்பு செய்யும் முறைகள்
இதன்மூலம் பிரீபெய்ட் சிம்கள் மட்டுமின்றி போஸ்ட்பெய்ட் சிம்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வேறு நெட்வார்க்கை பயன்படுத்தி வருகிறீர்கள், தற்போது உங்கள் நம்பரை அப்படியே ஏர்டெல் நம்பருக்கு மாற்ற வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இணையத்தில் இருக்கும் செயல்பாட்டு முறைக்கான வீடியோவை பார்த்தும் சிம்மை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
Airtel Thanks செயலி மூலமும் சிம் ஆக்டிவேஷன் குறித்து தெரிந்துகொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்கள் 9810012345 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டும் ஆக்டிவேஷன் குறித்த சந்தேகங்கள், குழப்பங்களை தீர்த்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் சிம்மை கையில் பெற்று 15 நாள்கள் வரை அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Airtel Sim Blinkit: எந்தெந்த நகரங்களில் இந்த சேவை உள்ளது?
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, குர்கான், ஃபரிதாபாத், சோனிபட், அகமதாபாத், சூரத், போபால், இந்தூர், புனே, லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 16 இந்திய நகரங்களில் தற்போது ஏர்டெல் சிம் கார்டை நீங்கள் ஆர்டர் செய்த பத்தே நிமிடங்களில் Blinkit செயலி மூலமாக டெலிவரி பெறுவீர்கள். இதனால், நீங்கள் கடைகளுக்கோ, ஷோரூம்களுக்கோ அலைய தேவையில்லை. உங்கள் தரவுகள் கசிந்துவிடுமோ என்ற அச்சமும் இனி தேவையில்லை. வீட்டில் இருந்த படியே நீங்கள் சிம் கார்டை பெறலாம். வயதானவர்களுக்கு இது பெரியளவுக்கு உதவும்.
Airtel Sim Blinkit: ஏர்டெல் மற்றும் பிளிங்கிட் விளக்கங்கள்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஏர்டெல் நிறுவனத்தில் நாங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்பிலும், வாடிக்கையாளரின் வாழ்க்கையை எளிதாக்குவதுதான் அடிப்படை நோக்கமாக இருக்கும். காலப்போக்கில் இந்த சேவையை கூடுதல் நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
பிளிங்கிட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா கூறுகையில், “வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்த, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் (16 நகரங்கள்) உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை நேரடியாக வழங்க ஏர்டெல்லுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும். டெலிவரி பணிகளை பிளிங்கிட் கவனித்துக்கொள்கிறது, அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் சுயமாக KYC-ஐ முடிக்க, தங்கள் சிம்மை செயல்படுத்தவும், ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தேர்வுசெய்யவும் ஏர்டெல் எளிதாக்குகிறது” என்றார்.