Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மும்பை மற்றும் லக்னோ அணிகளுடன் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா ஆகிய 5 அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. அதில் மூன்று போட்டிகளை சேப்பாக்கத்தில் இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Chennai Super Kings: பிளே ஆப் சுற்றுக்கு போகுமா சிஎஸ்கே?
இன்னும் சிஎஸ்கேவுக்கு 7 போட்டிகளே உள்ளன. இந்த போட்டிகளில் குறைந்தபட்சம் 6 போட்டிகளையாவது சிஎஸ்கே வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இயலும். அடுத்தடுத்து மும்பை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. சேப்பாக்கத்தில் இன்னும் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
தற்போது ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனியின் கைகளுக்கு வந்துள்ளது. தோனி தலைமையில் கொல்கத்தாவுக்கு எதிராக தோற்றாலும், அடுத்து லக்னோவுக்கு எதிராக வெற்றிபெற்று ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி ஆறுதல் அளித்தது எனலாம். அந்த வகையில், தோனி அடுத்தடுத்த போட்டிகளில் வென்று சிஎஸ்கேவை 13வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் மிரட்டலான வரலாறு
பலரும் இதற்கு 99% சாத்தியமே இல்லை என கூறிவந்தாலும், சில OG சிஎஸ்கே ரசிகர்கள் ‘தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று கூறி சில பல STD-க்களையும் அவிழ்த்துவிடுகின்றனர். ஆம், 2010ஆம் ஆண்டிலும் சிஎஸ்கே அணி இதுபோன்றுதான் முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும். ஆனால், அடுத்த 7 போட்டிகளில் 5இல் வென்று 4வது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. (அப்போது பிளே ஆப் சுற்று கிடையாது. 2 அரையிறுதிப் போட்டி, இறுதிப்போட்டி மட்டுமே)
அரையிறுதிக்கு தகுதிபெற்றதோடு நிற்காமல், அரையிறுதியில் அப்போதைய சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் பலமான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை ருசித்தார், தல தோனி. அதன் பின் தல தோனியையும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் சரி யாராலும் நிறுத்தவே முடியவில்லை எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கேவும்… தோனியும்…
தோனி அதன்பிறகு தான் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றார். சிஎஸ்கே அணி அதற்கு பிறகு 2010 சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 2011 ஐபிஎல் கோப்பை, 2014 சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 2018 – 2021 – 2023 ஐபிஎல் கோப்பை என அடுத்தடுத்து சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று CSK ஒரு மஞ்சள் டிராகனாக உருவெடுத்திருக்கிறது எனலாம்.
Chennai Super Kings: 2010 ஐபிஎல் தொடரில் நடந்தது என்ன?
இதில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவமும் மறைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு சீசனில் முதல் 7 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் டெல்லி மட்டுமே வென்றது. முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் உடன் தோற்றிருக்கும். பஞ்சாப்புடனான போட்டியில் சூப்பர் ஓவரில் சிஎஸ்கே தோற்றுவிடும். அடுத்து, ஆர்சிபி, மும்பை, ராஜஸ்தான் உடன் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே.
8வது போட்டியில் இருந்து சிஎஸ்கே வேறு லெவலுக்கு போனது. ஆர்சிபி, ராஜஸ்தான், மும்பை அணிகளை வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அதாவது முதல் கட்டத்தில் இந்த மூன்று அணிகளுடனும் சிஎஸ்கே தோற்றிருந்தது. இருப்பினும் அடுத்த போட்டியில் டெக்கான் அணியிடம் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா அணியிடம் வென்றாலும், டெல்லியிடம் தோற்றது சிஎஸ்கே. இதனால், பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Chennai Super Kings: தரம்சாலாவில் திக் திக் போட்டி
தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஷான் மார்ஷ் 88, இர்பான் பதான் 44, சங்கக்காரா 33 அதிரடியில் பஞ்சாப் 192 ரன்களை குவித்தது. அந்த போட்டியில் ஓபனர்கள் முரளி விஜய், ஹேடன் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் ரெய்னா 46, பத்ரிநாத் 53 ரன்களை அடித்திருப்பார். கடைசி கட்டத்தில் தோனியும், ஆல்பி மார்கலும் வெற்றிக்கு போராடுவார்கள். இர்பான் பதான் கடைசி ஓவரை வீச வருவார். சிஎஸ்கே வெற்றிக்கு அப்போது 16 ரன்கள் தேவைப்படும்.
முதல் பந்தில் லாங்-ஆப் திசையில் தோனி ஒரு பவுண்டரி அடிக்க, பதற்றம் பஞ்சாப் பக்கம் தாவியது. இரண்டாவது பந்திலும் அதே திசையில் அடித்து 2 ரன்கள் ஓடினார், தோனி. 3வது பந்தை வீசிய இர்பான் யார்க்கர் லெந்தை தவறவிட, தோனி அதை லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார். இன்னும் 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை.
Chennai Super Kings: தோனியின் அந்த ஒரு ஸ்பெஷல் சிக்ஸர்
இர்பான் பதான் இந்த முறை தோனிக்கு வசமான லெந்தில் வீச அதையும் வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு, தோனி அந்த போட்டியை வென்றுகொடுத்தார். அந்த சிக்ஸரை அடித்த பின் ஆக்ரோஷமாக கத்திய தோனி, தனது ஹெல்மட்டிலேயே ஒரு குத்து ஒன்றை வைப்பார்… அந்த காட்சிகளை இன்று பார்த்தால் Goosebumps நிச்சயம். சிஎஸ்கே மீதும், தோனி மீதும் அந்த தொடரில் வைக்கப்பட்ட ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு, இமயமலை நோக்கி அடிக்கப்பட்ட அந்த பந்தே பதிலாகவும் அமைந்தது எனலாம்.
Chennai Super Kings: நம்பிக்கையை வையுங்கள் ரசிகர்களே
அந்த காலகட்டத்தில் பலமான பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே வைத்திருந்தது. இப்போது யார் அப்படி இருக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்போதும் அஸ்வின், சுதீப் தியாகி போன்ற சில அனுபவமற்ற வீரர்கள் இருந்தார்கள். அவரை வைத்துதான் தோனி அப்போதும் கோப்பை அடித்தார். எனவே, ‘தலைவன் மீது நம்பிக்கை வைத்தால் திரிபாதியை வைத்துக்கூட கோப்பையை அடிக்கலாம்’ என்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். சிஎஸ்கேவின் இந்த வரலாறு நிச்சயம் அதன் கோடிக்கணக்கான ரசிகர்கள் நம்பிக்கையூட்டும்…