“இந்தியர்கள் மீதான போப் பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மிக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.

அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். அவரது மறைவு உலக சமூகத்துக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது சேவை, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை கோடிக்கணக்கானவர்களைத் தொட்டது. இந்த மாபெரும் இழப்பால் துக்கமடைந்துள்ள அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள்.” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.